உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174


ஆதலால் திருப்பத்தூர் கோட்டையின் மேற்குப்பகுதியில் தூக்கு மரங்கள் நாட்டப்பட்டு கொலைக்களம் அமைக்கப்பட்டது. "திசைவிளங்கும் திருப்பத்துர்" என தேவாரம் மூலம் தமிழ் உலகம் மட்டும் அறிந்து இருந்த அந்த ஊரை, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்ப்படையாக விளங்கிய மருது சேர்வைக்காரர்களது இறுதிக்களமாக, இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் அறிமுகப்படுத்தும் அரிய பணியை அக்கினியூ செய்தான்.

ஆயிரத்து எண்ணுற்று ஒன்றாவது ஆண்டு, அக்டோபர் மாதம் இருபத்து நான்காவது நாள் ஆங்கில நாட்காட்டியில் அதுவும் ஒரு சாதாரண நாள். இதனைப் போன்ற எத்தனையோ நாட்கள், புலரும் பொழுதுடன் புலர்ந்து மறைந்து விட்டன. ஆனால் நம்மைப் பொறுத்த வரையில் அன்றையப் பொழுது அப்படிப்பட்டதல்ல. வளையாத வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாளாக அந்தநாள் வந்தது. தொன்மையை நினைவுபடுத்தி தொல்லைகளைக் களைய முனைபவர்களுக்குத் துணையாகத் துணிவையும் தியாக உணர்வையும் வழங்கும் திருநாளாக வந்தது. அன்று, கர்னல் அக்கினியூ கும்பெனியாரின் தலைவரான சென்னைக்கோட்டையில் உள்ள கவர்னருக்கு ஓலை ஒன்றை அவசரமாக அனுப்பி வைத்தான்.4."... ... ... ...இன்று காலையில் திருப்பத்துர் கோட்டை இடிபாடுகளுக்கு இடையில், வெள்ளைமருதுவும் அவரது சகோதரர் சின்னமருதுவும் தங்கள் புரட்சி நடவடிக்கைக்காக மரண தண்டனை பெற்றனர். அவர்களது மக்கள் சிவஞானத்தை கமுதிக் கோட்டையிலும், உடையணனை திருச்சுழிக் கோட்டையிலும் தூக்கிலிடுமாறு செய்தேன். ஏனெனில், அந்தக் கோட்டைகளுக்கு அவர்கள் புரட்சித்தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர் ... ... ..." மேலும் இன்னொரு அறிக்கையில் "... ... ... மருது சேர்வைக்காரர்களால் (தஞ்சைத் தரணிக்கு) தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த நிலக்கிழார் சோனமுத்து, தஞ்சை சீமைப்பகுதியைக் கைப்பற்றி கொள்ளையிட்டவன். தஞ்சையிலும் சிவகங்கைச்சீமையிலும் இருந்த இவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவனை அறந்தாங்கி கச்சேரிமுன்பாக நிறுத்தி ஐநூறு கசையடி தண்டனை பெறுமாறும், அடுத்து இரண்டு ஆண்டுகள் இரும்புச் சங்கிலியால் பிணைத்து


4. Military Consultations, vol. 289 (24-10-1801) p. 7676-78.