உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

ஐவரும் கும்பெனியாரால் தூக்கில் இடப்பட்டனர். துரைச்சாமியும் நாடு கடத்தப்பட்டுவிட்டார். எஞ்சியுள்ள அவரது குடும்பத்தினரும் (விதவைகள் நால்வர், மருமக்கள், பேரக்குழந்தைகள், சகோதரி, சகோதரி மக்கள்) பணியாட்களுமாக முந்நூற்று இருபத்து ஐந்து பேர் இருந்தனர்.[1] இவர்களில் சிலருக்கு கி.பி. 1804 வரை குடும்ப பராமரிப்புத் தொகையான 128 சக்கரம் 4 பணம் வழங்கப்பட்டது.[2] இந்தத் தொகையைத் தமது ஜமீன் செலவில் தொடர்ந்து கொடுப்பதற்கு ஜமீன்தார் ஒய்யாத்தேவர் ஆட்சேபனை செய்ததால், சின்னமருது சேர்வைக்காரர் குடும்பம் பண உதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.[3] கும்பெனியாரும் அவர்கள் சிவகங்கை ஜமீன்தாரிடம் பெறும் பேஷ்குஷ் தொகையில் இருந்து இந்தப்பராமரிப்புத் தொகையைக் கொடுப்பதற்கு முன்வரவில்லை. ஆதலால் அந்தக் குடும்பத்தினர் எத்தகைய சிரமங்களை அனுபவித்து இருந்தனர் என்பதை அந்தக் குடும்பத்தினர் கும்பெனியாருக்குக் கொடுத்த பல மனுக்களில் இருந்து தெரிகிறது. லூஷிங்க்டன், பாரீஸ், பீட்டர், கென்லாக் என பரங்கிக் கலெக்டர்கள் ஒருவர்பின் ஒருவராகப் பணியேற்றவர்கள், அந்த மனுக்கள் மீது பரிந்துரையுடன் சென்னைக் கோட்டைக்கு, அந்த மனுக்களை அனுப்பிவைத்தனர். ஆனால் அவர்களது இன்னல்களுக்கு ஏனோ விடிவு ஏற்படவில்லை.

ஆனால் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட குமாரசாமியின் மகன் மருது சேர்வைக்காரரை மட்டும் இராமநாதபுரம் ஜமீன் தாரிணி மங்களேசுவரி நாச்சியார் அவரது வாழ்நாள் வரை (கி.பி. 1812) பண உதவி செய்து காப்பாற்றி வந்தார் எனத் தெரியவருகிறது. பின்னர், அவரும் பரங்கியரின் பரிவிற்காக ஏங்கி, 12-5-1821ல் விண்ணப்பம் செய்து கொண்ட ஆவணம் ஒன்றுள்ளது.[4]



——————————————
  1. Madurai District Records vol. 1 152 - (7-3-1807)
  2. Ibid (12-5-1821) pp. 101-102
  3. Ibid 1133 - (9-3-1807). р. 33.
  4. Ibid. 4669 - (12-5-1821) p. 99.