பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்

பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதிப்பகுதி தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான திருப்பமாக விளங்குகிறது. மதுரை மண்ணில், குறிப்பாக மறவர் சீமையில் அரசியல் மாற்றங்கள் மிகவும் விரைவாக உருப்பெற்றன. அத்துடன் வரலாறு காணாத வறட்சியும் மக்களை வாட்டி வதைத்தது. இந்தக் கொடுமைக்கு இடையில், பரங்கியரது ஆதிக்க வெறி, அருகம்புல்லைப்போல தாவிப்பாவியது.

பழமையும் பெருமையும் மிக்க இராமநாதபுரம், தஞ்சாவூர் தன்னரசுகளை நிரந்தரமாக நீக்கி விடுவதற்கு கும்பெனியார் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அத்துடன் முன்னூறு ஆண்டு கால நாய்க்க அரசின் ஆணிவேராக அமைந்து இருந்த பாளைகளைக் கண்டு குமைந்து எழுந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வாழ்நாளெல்லாம் வாடி மடியுமாறு வெஞ்சிறையில் தள்ளப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி, சாப்டுர் பாளையக்காரர்கள் துாக்கிலே தொங்கவிடப்பட்டனர். இந்தக் கொடுமைகளைக் கண்ட இராமநாதபுரம் சீமை மக்களுடன் மதுரை, திண்டுக்கல் சீமை பாளையக்காரர்கள் கொதித்து எழுந்தனர். அவர்களில் காடல்குடி, குளத்துார், கோல்வார்பட்டி, சிவகிரி, பழனி, விருபாட்சி, கன்னிவாடி. கோம்பை, தேவதானப்பட்டி, வாராப்பூர், நத்தம் பாளையக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இத்தகைய கொந்தளிப்பான நிலையில், சிவகங்கை அரசின் பிரதானிகளாகச் செயல்பட்ட மருது சேர்வைக்காரர்கள், தமிழக மக்களின் தன்மான உணர்வை அறுதியிட்டுக்காட்டும் துணிச்சலான முடிவை மேற்கொண்டனர். அதுவரை அவர்களது அருமை நண்பர்களாக இருந்து வந்த அவர்கள், ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரையும் அவர்களது ஆதிக்க கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவது என்பது அவர்களது முடிவு 'நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை, தீயினத்தின் அல்லல் படுப்ப தூஊம் இல்லை" யல்லவா? ஆனால் இந்த முடிவைச்செயல்படுத்த வல்லோ-