பக்கம்:மின்னல் பூ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏந்திய கை


ஏந்திய கையுடன் வந்தேன்—என்னை
ஏனென்றும் கேளாவுன் கருணைப் பெருக்கைப்
பேர்ந்தடி வைத்த கணத்தில்—உன்றன்
பெருவிழிக் கோணப்புன் னகையினிற் கண்டேன்
காணாத பேருண்மை கண்டேன்—வாழ்வில்
கற்றிட வேண்டிய பாடமுங் கற்றேன்
நாணாது கை தொட்ட ஓட்டை—ஓரிரு
நாலெட்டுச் சுக்கலாய் வீசி உடைத்தேன்
ஈதல் உவகையுங் கண்டேன்—உடமை
எல்லாம் வழங்கிட வழிபார்த் திருந்தேன்
ஆதவன் தோன்று முன் கூடி—மக்கள்
அணியணியாயுன்றன் வாயிலில் நின்றார்
தேவை யெலாம்பெற வந்தோர்—இருள்
சேர்ந்திடும் எல்லையில் அரவம் ஒடுங்கி
மேவிப் பலதிசை செல்ல—வானில்
மின்சுடர் பேயந்து தம் பிறவிக்கு முன்னால்
புத்தொளிக் கன்னி எழுந்து—தொல்லைப்
புதையிருள் ஓடிடச் செய்த பெரும்போர்
வித்தக மாக்கதை யெல்லாம்—கேட்டு
மெய்மறந் துள்ளன போலவே காணும்
அந்தநல் வேளை நான் உன்றன்—அருள்
அடியிணை மலர்களில் வந்து பணிந்தே
இந்த நல் வீணையை ஏற்று—உயர்
இன்னிசை மீட்டென வேண்டுவன் ஐயா.

(தாகூர் கவிதைத் தழுவல்)

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/111&oldid=1121454" இலிருந்து மீள்விக்கப்பட்டது