பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

சொல்லிவிட்டு நழுவ, 'அவள் என்ன பச்சைக் குழந்தையா, நீ போய் அவளைத் தட்டித் தூங்க வைக்க? கொஞ்ச நேரம் இப்படித்தான் உட்காரேன்; பேசிக் கொண்டிருப்போம்!' என்று அவர் ஆசையோடு அவள் பின்னலைப் பிடித்து இழுக்க, அந்தப் பின்னல் அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவருடைய கையோடு கழன்று வர, 'அம்சா! ஆபத்து, ஆபத்து! உன் அப்பாவிடமிருந்து என்னைக் காப்பாற்று, உன் அப்பாவிடமிருந்து என்னைக் காப்பாற்று!’ என்று கத்திக் கொண்டே அந்த 'ஆனந்தி'யாகப்பட்டவள் அம்சாவைத் தேடி 'ஓடு, ஓடு’ என்று ஓடுவாளாயினள்.

‘நான் அப்போதே சொன்னேனே, கேட்டீர்களா?' என்று அந்த 'ஆனந்தி'யிடம் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு வந்த அம்சா தன் அப்பாவின் கையிலிருந்த பின்னலைப் பிடுங்கி அப்பால் எறிந்துவிட்டு, ‘அவர் ஆனந்தியும் இல்லை. கீனந்தியும் இல்லை, அப்பா! என்னுடன் படிக்கும் ஆனந்தன் அவர்! டிங்-டாங் பத்திரிக்கையின் விளம்பர இலாகா மானேஜரும் இவரும் நண்பர்கள். அவர் கொடுத்த விலாசத்திலிருந்து இவர் நீங்கள்தான் என் அப்பா என்பதைத் தெரிந்து கொண்டு இந்த வேஷத்தைப் போட்டிருக்கிறார்!’ என்று குட்டை உடைத்துவிட்டுக் கையைப் பிசைய, 'எனக்கு மட்டும் தெரியாதா, அது? கோடை விடுமுறையில்கூட உன்னை விட்டுப் பிரிந்திருக்க முடியாமல் இவர் இப்படிச் செய்திருக்கிறார்! அதையும் தெரிந்துகொண்டுதான் தெரியாதவன் போல் நடித்தேன் நான்!' என்று சொல்லி அவர் அவளைச் சமாளித்து, அடுத்த முகூர்த்தத்திலேயே அவளுக்கும் அவனுக்கும் கலியாணத்தையும் செய்து வைத்து, ‘எனக்குப் பொழுதே போகமாட்டேன் என்கிறது; நீங்களாவது சீக்கிரம் ஒரு பேரக் குழந்தையைப் பெற்று என்னிடம் கொடுங்கள், விளையாட!’ என்பதாகத்தானே சொல்லித் தம் அசட்டுத்தனத்துக்கு அன்றுடன் ஒரு முடிவு கட்டிக் கொள்வாராயினர்'.