பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

181

வருகிறார்கள். எத்தனையோ வண்டிகளில் ஏறுகிறார்கள், எத்தனையோ ஊர்களுக்குப் போகிறார்கள். அவர்களில் எந்தத் தாயைக் கண்டோம் நாங்கள், எந்த வண்டியைக் கண்டோம் நாங்கள், எந்த ஊரைக் கண்டோம் நாங்கள்?' என்று அவன் தன் கையை அகல விரிக்க, அவன் குதிரையை விரட்டுவதுபோல இவன் அவனை ‘சரி சரி, போ போ!’ என்று எரிச்சலுடன் விரட்டுவானாயினன்.

வேலூர் வந்தது; வண்டி நின்றது. இறங்கினான். பிரபாகர்; ஏறி இறங்கினான் ஒவ்வொரு நகைக் கடையாக. ‘இது உங்கள் கடை நகையா, இது உங்கள் கடை நகையா?' என்று கேட்டதுதான் மிச்சம்; கிடைத்த பதில், இல்லை, இல்லை, இல்லை!’

கடைசியாக ஒரு கடைக்காரர் சொன்னார், ‘இது கடை நகையில்லை, கை தேர்ந்த ஆச்சாரி யாரோ செய்திருக்கிறான்!' என்று. ‘அந்த ஆச்சாரியை உங்களுக்குத் தெரியுமா?' என்று அவன் அவரை ஆவலோடு கேட்டான். கிடைத்த பதில், ‘தெரியாது, தெரியாது, தெரியாது!’

‘சரி, தெரிந்தவன் எங்கே இருப்பான்?’ என்று அவன் காட்பாடியை ஒரு வலம் வந்ததுபோல வேலூரையும் ஒரு வலம் வர, அங்ஙனம் வந்தகாலை ஓர் ஆச்சாரியின் கடை அவன் கண்ணில் பட, புதுமுகமே கிடைத்துவிட்ட பூரிப் போடு அவன் அவரை நெருங்கி, 'ஐயா, பெரியவரே! அனு பவத்தில் சிறந்தவரே! பார்க்காத ஆச்சாரிகளை யெல்லாம் பார்த்தவரே! இந்தத் திருகுப்பூ செய்த ஆச்சாரியை உமக்குத் தெரியுமா?’ என்று தன் கையிலிருந்த திருகுப் பூவைக் காட்டிக் கேட்க, அவர் அதை வாங்கி ஒரு முறைக்கு இரு முறையாகத் திருப்பிப் திருப்பிப் பார்த்துவிட்டு, 'இது வள்ளிமலை ஆச்சாரி சென்னிமலை செய்த வேலை!' என்று சொல்ல, 'அப்படியா சங்கதி? இந்தாரும், ஐந்து ரூபா!' என்று அவரிடம் ஓர் ஐந்து ரூபா நோட்டை எடுத்து நீட்டிவிட்டு, அவன் உடனே வள்ளிமலைக்குச் செல்வானாயினன்.