பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

விந்தன்


இருந்தால் இப்போதே சொல்லிவிடும். அனாவசியமாகப் பேசி, உம்முடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். அவற்றையெல்லாம் வாங்கிச் சாப்பிடக் கூடிய வயதை நான் இன்னும் அடையவில்லை!' என்று விக்கிரமாதித்தர் குறுக்கிட்டுச் சொல்ல, ‘இலக்கிய இன்பம் ஊட்டுவதுதான் என்னுடைய வியாபாரமே தவிர, இல்லற இன்பம் ஊட்டுவதல்ல' என்று வந்தவர் அதை மறுக்க, ‘இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, ‘சம்பந்தப்படுத்தத்தானே வந்திருக்கிறேன்!' என்று வந்தவரான சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் சொல்லலுற்றாஆர், சொல்லலுற்றாஆர், சொல்லலுற்றாஆஆர்:

‘ஊர்பேர் தெரியாமல் இருந்த எத்தனையோ பேரை இந்த உலகத்துக்கே தெரிந்தவர்களாக்கிய பெருமை எனக்கு உண்டு. அவர்களில் ஒரே ஒருவரைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன். தயவு செய்து செவி மடுக்க வேணும். ‘தன்னலக் கழகத் தலைவரான-மறந்துவிட்டேன், தமிழ் நலக்கழகத் தலைவரான திருப்பதி திருஞானத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது என் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கும் அவருக்குப் பேச வரும் அளவுக்கு அப்போது எழுத வருவதில்லை. அதற்காக அவரை நான் விட்டேனா? ‘பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது; எழுதவும் வேண்டும். இது காங்கிரஸ் சீசன்; கட்டபொம்மனையும் வ.உ.சி. யையும் ஒரு கை பாரும்!' என்றேன். அவர் தயங்கினார்; 'தயங்காதீர்!’ என்று அவர்களைப் பற்றி ஏற்கெனவே சிலர் எழுதியிருந்த புத்தகங்களை வாங்கி அவரிடம் கொடுத்து, 'இவற்றை வைத்துக்கொண்டு இதேமாதிரி உம்முடைய சொந்த நடையில் எழுதிப் பாரும்; பேச வருவதோடு எழுதவும் வந்துவிடும்’ என்றேன்; எழுதினார். அதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவிக்கலாம். அதுதான் இல்லையென்றால் அந்தப் புத்தகங்களுக்கு ‘ராயல்டி'யாவது கேட்காமல் இருந்திருக்கலாம். கேட்டார்; என் வயிறெரியக்