பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235

பாதாளம் சொன்ன
பத்துப் புத்தகங்கள் கதை

‘நெட்டையரான இந்தக் குட்டையன் செட்டியார் புத்தக வியாபாரம் மட்டும் செய்து வரவில்லை; வேறு எத்தனையோ வகையான வியாபாரங்கள் செய்து வந்தார். அவற்றில் சில வெளியே சொல்லக் கூடியவை; சில வெளியே சொல்லக் கூடாதவை. அந்த வியாபாரங்களில் ஒன்று, இவர் சில டாக்சிகளை வாங்கி ஓட்டியது. என்னுடைய போதாத காலம், இவருடைய டாக்ஸி டிரைவர்களில் ஒருவனாக நானும் அப்போது இருந்து வந்தேன்.

ஒரு நாள் பத்துப் புத்தகங்களுடன் ஓர் எழுத்தாளர் இவரைத் தேடி வர, அந்தப் புத்தகங்களை இவர் வாங்கிப் பார்த்துவிட்டு, 'எல்லாம் இந்தியிலிருந்து மொழி பெயர்த்த நாவல்களாக அல்லவா இருக்கின்றன? இவற்றுக்காக உமக்குப் பணம் கொடுப்பது போதாதென்று இந்தி ஆசிரியருக்குமல்லவா ஏதாவது கொடுத்துத் தொலைக்க வேண்டும்?’ என்று தன் கண்ணிலிருந்து வடிந்த ரத்தத்தைத் தன்னுடைய மேல் துண்டால் துடைத்துக் கொண்டே சொல்ல, 'வேண்டாம்; அந்த நூலாசிரியர் இறந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சட்டப்படி நீர் அவருக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம்!' என்று வந்தவர் அபயம் அளிக்க, 'அதே மாதிரி நீரும் செத்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கக் கூடாதா?’ என்று இவர் முணுமுணுத்துக் கொண்டே, 'சரி, இந்தப் பத்துப் புத்தகங்களுக்கும் நீர் என்ன எதிர்பார்க்கிறீர்?’ என்று கேட்க, ‘இவற்றை நானே வெளியிடலாமென்று இருந்தேன். அதற்குள் என் மனைவி உடல் நலம் கெட்டுப் படுத்த படுக்கையாகி விட்டாள். அவளுடைய வைத்தியச் செலவுக்கு இவற்றைத்தான் இப்போது நம்பியிருக்கிறேன்!'