பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

249

ஆரம்பித்து நடத்திக்கொண்டு வந்தால், அது மக்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்குப் பயன்படுகிறது; தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்கும் வகையில் அது எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் பயன்படுகிறது. தேர்தல் இல்லாத காலங்களிலோ ஆனந்தமாகச் சீட்டாட அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்!' என்று பாதாளம் இவர் தட்டிய தட்டினால் சற்றே நெளிந்து சொல்ல, 'அப்படியா சமாசாரம்? அதில் என்ன தகராறு உங்களுக்கு?’ என்ற இவர் மேலும் குடைய, ‘எங்கள் வட்டாரத்தில் இப்போது உபதேர்தல் ஒன்று நடந்ததே, அதனால் ஏற்பட்ட தகராறு அது!’ என்று அவன் அப்போதும் அதிலிருந்து நழுவப் பார்க்க, ‘ஏன், கிடைத்ததைப் பங்கு போட்டுக் கொள்ளும்போது உங்களுக்குள் சண்டை வந்துவிட்டதா, என்ன?’ என்று விக்கிரமாதித்தர் அவனை விடாமல் இழுத்து வைத்துக் கேட்க, ‘அந்த விஷயத்தில் நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோமா? வெளியே தெரிந்தால் எங்கள் தொண்டின் தூய்மையே அதனால் கெட்டுவிடாதா? காதும் காதும் வைத்தாற்போல் அந்தக் கதை நடந்துவிட்டது; இது வேறு கதை!’ என்று பாதாளம் சொல்ல, 'அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்?' என்று இவர் சிரித்துக் கொண்டே கேட்க, ‘ஏது, ஆளை விடமாட்டீர்கள்போல் இருக்கிறதே?' என்று அவனும் சிரித்துக்கொண்டே சொன்னதாவது:

'ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் எங்கள் வட்டாரத்தில் கிளைகள் உண்டு. ஆகவே, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் எங்கள் மன்றத்தின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை; நாங்களும் அவர்கள் இருக்கும் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டோம். எங்களுடைய வாடிக்கையாளர்களெல்லாம் சுயேச்சையாளர்கள்தான். சுயேச்சையாளர்கள் என்றால் மட்டும் என்ன, சும்மாவா? நிமிஷத்துக்கு நிமிஷம் மந்திரி சபைகள் மாறிக்