பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

253

தார்கள்? நான் பத்து தருகிறேன்!' என்றார் அவர். 'சரி, கொடும்!' என்று வாங்கிக்கொண்டு, 'நாளை வந்துப் பாரும்!’ என்றேன் நான். அவர் போய்விட்டார்.

‘ஆகா! ஜனநாயகம் என்றால் 'பண நாயகம்’ என்று இப்போதல்லவா தெரிகிறது நமக்கு!' என்று எண்ணிக் கொண்டே நான் அவர்கள் கொடுத்த பணத்துடன் முதலில் ராமன் வீட்டிற்குச் சென்று, விஷயத்தைச் சொன்னேன். அவர், 'ராமா, ராமா' என்று காதைப் பொத்திக்கொண்டு, ‘எனக்கு உங்கள் பணமும் வேண்டாம்; அதற்காக என் அபேட்சையை வாபஸ் வாங்க நான் தயாராகவும் இல்லை!' என்றார். 'கிடக்கிறார், பிழைக்கத் தெரியாத மனிதர்!' என்று நான் ராவணனின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் இரு கைகளையும் நீட்டி நான் கொடுத்த ரூபா பதினைந்தாயிரத்தையும் வாங்கிக்கொண்டு, ‘ஆகா! அதற்கென்ன, அப்படியே செய்துவிடுகிறேன்!' என்றார். 'நன்றி!' என்று சொல்லிவிட்டு நான் திரும்பினேன். ‘அதை நாய்க்குச் சொல்லுங்கள்; நரிக்குச் சொல்ல வேண்டாம்!' என்றார் அவர்.

மறு நாள் சொன்னது சொன்னபடி ஆளுங் கட்சிக்காரரும் எதிர்க் கட்சிக்காரரும் ஒருவர் பின் ஒருவராக என்னைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். ‘இரண்டு சனியன்களில் ஒரு சனியனாவது ஒழிகிறேன் என்று சொல்கிறதே, அதைச் சொல்லுங்கள்!' என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரும் எங்கள் மன்றத்துக்குரிய கமிஷனை மறக்காமல் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

‘நரிச் சின்னம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டதால், நாங்கள் நாய்ச் சின்னத்துக்கு வேலை செய்தோம். யார், எதற்கு வேலை செய்து என்ன பிரயோசனம்? கடைசியில் வெற்றி என்னவோ நரிச் சின்னத்துக்குத்தான் கிட்டிற்று. ‘ஏன், அவர் வாபஸ் வாங்கிக் கொள்ளவில்லையா?' என்கிறீர்களா? எங்கே வாங்கினார்?