பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

281


அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் வீட்டுக்கு வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ‘என்னம்மா, பணக்காரப் பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா?’ என்று பெண்ணைப் பெற்றவளை விசாரிக்க, 'ஆமாம்; பார்த்து வைத்திருக்கிறேன்!' என்று அம்மையார் சொல்ல, 'சரி, படித்த பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்?' என்று அவர் அடுத்தாற்போல் பெண்ணைப் பெற்றவரைக் கேட்க, ஆமாம், பார்த்து வைத்திருக்கிறேன்!' என்று அப்பனார் சொல்ல, 'ரொம்ப சந்தோஷம்; உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கூர்க்காவுக்கு அவர்கள் இருவரையும் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'தெரியாது!’ என்று அவர்கள் இருவரும் பின்னும் சொல்வாராயினர்.

'அப்படியானால் ஒன்று செய்யுங்கள!' என்றார் விக்கிரமாதித்தர்; 'என்ன செய்ய வேண்டும்?’ என்றார் பெண்ணைப் பெற்றவர். 'அவர்கள் இருவரையும் நாளை மாலை பெண் பார்க்க இங்கே வரச் சொல்லுங்கள். அவர்களில் யாருக்கு உங்கள் வீட்டுக் கூர்க்கா முதல் மரியாதை கொடுக்கிறானோ, அவனுக்கு உங்களுடைய பெண்ணைக் கலியாணம் செய்து வைத்து விடுங்கள்!' என்றார் விக்கிரமாதித்தர்; 'அப்படியே செய்கிறோம்' என்றனர் தம்பதியர் இருவரும்.

‘சரி, நான் வருகிறேன்!' என்று விக்கிரமாதித்தர் புறப்பட, ‘நாளை மாலை நீங்களும் இங்கே வந்துவிட வேண்டும்’ என்று அவர்கள் அவரைக் கேட்டுக்கொள்ள, ‘ஆஹா! அதற்கென்ன, வருகிறேன்!' என்று சொல்லிவிட்டு, அவர் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்வாராயினர்.

சொன்னது சொன்னபடி மறுநாள் மாலை வந்த விக்கிரமாதித்தர், ‘என்ன, அவர்கள் வந்துவிட்டார்களா?’ என்று தம்பதியர் இருவரையும் விசாரிக்க, 'இல்லை; நீங்கள் உட்காருங்கள். அவர்கள் இதோ வந்துவிடுவார்கள்' என்று அவர்கள் அவரை உட்கார வைத்துவிட்டு, 'நாங்கள்