பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

சாமியும் வாழ்ந்து வந்தகாலையில், ஒரு நாள் பொன்னியின் தகப்பனாருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் சண்டை வர, அந்தச் சண்டையில் பக்கத்து வீட்டுக்காரர் பொன்னியின் தகப்பனாரை ஓர் அறை அறைந்துவிட, அவரைத் திருப்பி அறைய முடியாத பொன்னியின் தகப்பனார், ‘என்னை யார் என்று நினைத்துக் கொண்டாய்? போலீஸ்காரரின் மாமனாராக்கும்! அவரிடம் சொல்லி உன்னை நான் என்ன செய்கிறேன், பார்!’ என்று சூள் கொட்டிவிட்டு வந்து மருமகப் பிள்ளையிடம் நடந்ததைச் சொல்ல, 'இதற்குப் போய் அவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா, என்ன? என்னுடன் வந்து ஆளைக் காட்டுங்கள்; நானே அவரைப் பதிலுக்குப் பதில் அறைந்துவிடுகிறேன்!' என்று மருமகப்பிள்ளையாகப்பட்ட கீலீஸ்காரர் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கிளம்ப, 'அது போதாது அவனுக்கு! அன்றொரு நாள் 'நான் நினைத்தால் உம்மைக் கூடச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போய் லாக்-அப்பில் அடைத்துவிடுவேன், ஜாக்கிரதை!’ என்று என்னை மிரட்டினீர்களே, அந்த மாதிரி அவனைக் கொண்டு போய் ஒரே ஒரு நாளாவது லாக்-அப்பில் அடைக்க வேண்டும்; அதை இந்தக் கண்கள் பார்த்துக் களிக்க வேண்டும்!' என்று மாமனாராகப்பட்டவர் தம் கண்களைக் காட்டிச் சொல்ல, ‘இதென்ன தொல்லை! இந்தச் சோதனையிலிருந்து எப்படித் தப்புவது என்று தெரியவில்லையே?’ என்று மருமகப்பிள்ளை விழிக்க, 'நீங்கள் எதற்கும் யோசிக்காதீர்கள்; அதற்காக மற்றவர்களைப் போல நானும் ஏதாவது 'சம்திங்' கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுத்து விடுகிறேன்!' என்று மாமனார் 'டக்' கென்று மணிபர்ஸை எடுத்துத் திறக்க, 'வேண்டாம், வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்; இதோ வந்துவிட்டேன்!' என்று கீலீஸ்காரர் வெளியே வந்து, 'ஏ. விக்கிரமாதித்தா, இனி நீயே கதி!’ என்று வாய் விட்டுக் கதறிக் கொண்டே மிஸ்டர் விக்கிரமாதித் தரைத் தேடி 'ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.