பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


14. உயிர்த் தமிழே!

முன்னைப் பழம் பொருளே - வேந்தர்
மூவர் உயிர்த் தமிழே!
கன்னற் சுவை யமுதே - என்றன்
கண்ணின் மணி விளக்கே!
என்னைப் பழிப்பவனை - நான்
ஏதும் நினைப்பதில்லை
உன்னைப் பழிப்பவனைப் - பகையா
உள்ளம் நினைக்கு தம்மா

தீங்குனைச் சாரு தென்றால் - என்றன்
சிந்தை கொதிக்கு தம்மா!
பாங்குனை மேவு தென்றால் - நெஞ்சம்
பாய்ந்து மகிழு தம்மா!
ஆங்கிலம் கற்றவரும் - வந்த
அயல்மொழி கற்றவரும்
ஈங்குப் புறக்கணித்தார் - அறிவை
என்று பெறுவாரோ?

தாயைப் பழித்துரைத்தால் - நெஞ்சம்
தாங்கிட ஒப்பவில்லை
நாயவன் என்றுமிழ - உணர்வு
நாடிப் பெருகுதம்மா !
காயைக் கவர்ந்திடுவார் - நல்ல
கனிச்சுவை தானுணரார்
மாயச் சுமையுடலை - ஓம்பிட
மானம் விலைபகர்வார்.

தோள்வலி மிக்கமையால் - எம்மைத்
தூற்றினர் வடவேந்தர்
வாள்வலி யாலவரை - வீழ்த்தி
வாழ்ந்ததும் இந்த இனம்
மாள்வது கண்டபினும் - பேதை
மாந்தரும் துஞ்சுகின்றார்!
ஆள்வதும் எம்மொழியோ? - இங்கே
ஆண்மையும் செத்ததுவோ?

[காவியப் பாவை]