பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் [295] கல்வெட்டாகப் பதிந்திருக்கும். அன்பின் உறைவிடம். அடக்கத்தின் பிறப்பிடம், கூர்த்த மதியினர். சீர்த்த பண்பினர். ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவர். 'எதுவும் தேவையென்றால் அக்காவிடம் சொல்' என்று வை.சு. சண்முகனார் என்னிடம் கூறியிருப்பினும் நான் இவர்களிடம் எதுவுமே சொன்னதில்லை. எனினும் அவர்களே முன் வந்து எனக்குப் பேருதவிகள் பல செய்துள்ளார். சண்முகனார் பாரதியைப் புரந்தார்; பாரதிதாசனுக்கு உறுதுணை செய்தார்; இன்னுங் கவிஞர் பலர்க்கும் காப்பரணாக விளங்கினாl. அவரைப் போலவே அவர்தம் மகளாரும் என் போன்றார்க்குப் பேருதவியாளராக விளங்கிவருகிறார். எனக்கு உடன் பிறந்தாl இலையே என்ற மனக்குறையை நீக்கி விட்டார். உடன் பிறவாத தமக்கையாக நின்று என் வாழ்க்கையில் எனக்கு ஒர் ஊன்று கோலாக விளங்கி வருகிறார். எங்கள் இல்லத்தில் நிகழும் திருமணச் செலவு, கல்விச் செலவு மருத்துவச் செலவு, பிற செலவு எவ்வகைச் செலவாயினும் தமக்கையாரின் பங்கு உறுதியாக வுண்டு. அவர்களே வலிய முன் வந்து மனமுவந்து உதவுவார்கள். என் மகள் அல்லியின் கல்லுரிப் படிப்புக்கான செலவை அவரே ஏற்றுக் கொண்டார். அவர் சென்னையிலிருந்து ஒரு முறை மடல் எழுதி யிருந்தார். அதில் அவருடைய அன்புணர்வையும் உரிமையுணர்வையும் பெருந்தன்மையையும் புலப்படுத்திருந்தார். தம்பி! நம் அல்லிக்குக் கல்லூரிக் கட்டணம் கட்ட வேண்டுமே: காலங் கடந்து விட்டதென்று கருதுகிறேன். நான் மறந்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்களாவது நினைவு படுத்தி எழுதியிருக்கலாமே. உங்கள் இயல்பு எனக்குத் தெரியும். நீங்கள் கேட்க மாட்டீர்கள். என்னை வித்தியாசமாகக் கருதி விட்டீர்களா? உங்களுக்கு முற்பிறப்பு, மறுபிறப்பு இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லை. எனக்கு நம்பிக்கையுண்டு. போன பிறவியில் நாம் அக்கா, தம்பியாகப் பிறந்திருப்போம் என்று என் மனம் எனக்குச் சொல்கிறது. அதனால் கூச்சப் படாமல் எனக்கு எழுதலாம் தம்பி.