பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 முடியரசன் என்ற என் பெயர் அவர்களுக்கு எரிச்சலூட்டிக் கொண்டேயிருக்கும். அப்பெயர்பற்றி என்னிடம் கடுமையாக வாதிடுவர். துரைராசு என்ற பெயரை அப்படியே தமிழாக்கிக் கொண்டேனே தவிரக் குடியரசுக் கோட்பாடுகளுக்கு மாறாக வைத்துக் கொள்ளவில்லையென்று எவ்வளவு அமைதி கூறினும் ஏலாது எரிந்து விழுவர். அவர்கள் பொதுவுடைமைக் கருத்துடையவர்களாதலின் முடியரசன் என்ற பெயரைக் கேட்டவுடன் சார் மன்னன் கண்ணுக்குத் தோன்றி விடுகிறான். அதனால் காய்ந்து குதித்தார்கள். சிந்தனைக்கு இடங்கொடாது, அவர்கள் கொண்ட முடிபே சரி யென்று வாதிடும் இயல்பினர். தயரதனைப் போற்றுவர், இராமனைப் புகழ்வர். ஆனால் தமிழ் முடியரசனை மட்டும் விழையார். பொதுவுடைமைக் கொள்கைக்கே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட ப.சீவானந்தம் அவர்களிடமும் பழகியிருக்கிறேன். அவர் என் பெயரைக் குறை கூறியதில்லை. பிறிதொருகால், அ.இளங்கோவனும் நானும் பகீரதன் என்ற எழுத்தாளரைச்சந்திக்க நேர்ந்தது. இளங்கோவன், இவர் முடியரசன் என என்னை அறிமுகஞ் செய்து வைத்தார். உடனே அவர் முடியரசனா? இந்தப் பெயர் அக்ளி'யாக இருக்கிறதே என்று முகஞ்சுளித்தார். முடி என்றவுடன் தலையில் முளைக்கும் முடிதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அக்ளி' என்று கூறி விட்டார். என்ன ஐயா! இப் பெயரை அக்ளி' என்கிறீர்களே! பூவராகன் (நிலப்பன்றி) வராக மூர்த்தி (பன்றிவடிவன்) என்றெல்லாம் பெயர்கள் இருக்கின்றனவே; அவை உங்களுக்கு அக்ளி'யாகத் தோன்ற வில்லையா? அது கிடக்கட்டும் உங்கள் இயற்பெயர் மகாலிங்கம்' அல்லவா? 'லிங்கம்' என்றால் குறி என்று பொருள், 'மகாலிங்கம்’ என்றால் பெரிய குறி என்றல்லவா பொருள். இது உங்களுக்கு 'அக்ளி'யாகத் தோன்றவில்லையா? என்று நான் விளக்கினேன். அவருக்கு முகம் சுருங்கிவிட்டது. 'என்ன இருந்தாலும் இந்தக் காலத்துக்கு ஏற்ற பெயரில்லை என்று மழுப்பினார். சரி, சக்கரவர்த்தி' என்றும் ராஜாஜி என்றும் பெயர் வைத்துக் கொள்கிறார்களே அவை மட்டும் இக்காலத்துக்கு ஏற்ற பெயர்களோ?