பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இரண்டாம் அதிகாரம்

குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும்

கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், தென்மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத் திறுதிக் காலத்தில் நிலவிய சில சோழமன்னருடைய பெயர்கள் அச்சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள பாடல்களாலும் நூல்களாலும் தெரிகின்றன. அவர்களுள் சோழன் கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, செங்கணான் முதலானோர் சிறந்தவராவர்.

இன்னோருள் சோழன் கரிகாலன் என்பான் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறந்த துறைமுகப்பட்டினமாகக் கட்டி, அதனை வாணிபத்திற்கேற்ற வளநகராக்கியவன் ; காவிரியாற்றின் இருமருங்கும் கரையெடுப்பித்துச் சோணாட்டை வளப்படுத்திச் 'சோறுடைத்து' என்று அறிஞர்கள் புகழுமாறு செய்தவன்.[1] இது பற்றியே இவ் வேந்தர் பெருமானைக் கரிகாற்பெருவளத்தான் என்றும் திருமாவளவன் என்றும் மக்கள் பாராட்டிக் கூறுவாராயினர். பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப் படையும், பட்டினப்பாலையும் இம்மன்னன்மீது பாடப்பெற்ற நூல்களேயாம். இவற்றுள் பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு இவ்வேந்தன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அந்நூலைக்கொண்டான் என்று கலிங்கத்துப்-


  1. கலிங்கத்துபரணி தா. 184