பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னோரும் பிறப்பும்

21

பெய்தித் தன் காதற்பேரனைக் கைகளில் ஏந்திப் பாராட்டியபோது சில திங்களுக்குமுன் காலஞ்சென்ற தன் நாயகனுடைய அடையாளங்கள் பல அக்குழந்தையின்பாலிருத்தல்கண்டு 'இவன் எமக்கு அருமகனாகி எங்கள் இரவிகுலத்தைத் தளராது தாங்குவானாக' என்றுரைத்து அம்மகவிற்கு 'இராசேந்திர சோழன்'[1] என்று பெயரிட்டாள்.[2] இவ்வரசிளங்குமாரனும் அங்கேயே வளர்ந்து வந்தான். இராசேந்திரனும், இளமையில் கல்வி கற்றுப் பல கலைகளிலும் தேர்ச்சியுற்று அறிஞர் யாவரும் 'கற்றுத் துறைபோய நற்றவக் குரிசில்' என்று புகழ்ந்து பேசுமாறு கல்வியில் உயர்நிலையையடைந்தான். பிறகு இவ்வரசிளங் குமரன், உலகங் காக்கும் கடமை பூண்ட தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியும் பெற்று, யானையேற்றம் குதிரை யேற்றங்களும் பயின்று, தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனன். இவனது அம்மான் மார்களாகிய இராசாதிராசசோழன், இரண்டாம் ராசேந்திர சோழன், வீரராசேந்திரசோழன் முதலானோர் இவனிடத்து மிக்க அன்புடையவர்களாக நடந்துவந்தனர். இவனது ஆற்றலையுணர்ந்த சான்றோர் தந்தையின் சந்திர குலத்தையும் தாயின் சூரிய குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்து, அவற்றைப் புகழுக்கு நிலைக்களமாக்க வந்த உபயகுலோத்தமன் என்று இவனைப் பெரிதும் பாராட்டிப் பேசுவாராயினர்.


  1. 14. இந்த இராசேந்திர சோழனே நம் வரலாற்றுத் தலைவனாகிய முதலாம் குலோத்துங்க சோழன். இப்பெயர் இவனுக்கு அபிடேகப் பெயராக வழங்கத்தொடங்கிற்று.
  2. 15. க, பரணி - தா. 223, 224, 225.