பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசாட்சி

39

விலுள்ள கோட்டூரிலும் காணப்படுகின்றன. ஆதலால் இவன் சோழமண்டலத்தை ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஆண்டிருத்தல் வேண்டும். இவன் தன் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனாலும், மாமன்மார்களாகிய இராசாதிராசன், இரண்டாம் ராசேந்திரன், வீரராசேந்திரன் முதலானோராலும் அரும்பாடுபட்டு உயரிய நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழமண்டலத்தை, அதன் பெருமையுஞ் சிறப்பும் ஒரு சிறிதுங் குறையாதவாறு, யாண்டும் அமைதி நிலைபெறச் செங்கோல் செலுத்திய பெருந்தகை ஆவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட சோழன் கரிகாற்பெருவளத்தான், முதலாம் இராசராச சோழன், கங்கைகொண்டசோழன் முதலான பேரரசர்களை இவனுக்கு ஒப்பாகக் கூறலாமேயன்றி ஏனையோரைக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. இவன் காலத்திற்குப் பின்னர் இவனுக்கு ஒப்பாகக் கூறத்தக்க சோழமன்னன் ஒருவனும் இலன் என்றே கூறிவிடலாம். எனவே, நம் தமிழகம் தன்னைப் புகழுக்கும் பெருமைக்கும் நிலைக்களமாக்கிக் கோடற்குச் சிற்சில காலங்களில் அரிதிற்பெறும் பெருந் தவப்புதல்வர்களுள் ஒருவனாகவே இவனைக் கருதல் வேண்டும். இவனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரையிற் பரவியிருந்தது. அந்நாளில் சோழநாட்டிற்கு வடவெல்லையாகவும் மேலைச்சளுக்கிய நாட்டிற்குத்தென் னெல்லையாகவும் அமைந்திருந்தது இடையிலுள்ள துங்கபத்திரையாறே ஆகும். இப்பெருநில வரைப்பில் நம் குலோத்துங்கன் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பது யாண்டுகள் அமைதியாக ஆட்சிபுரிந்தது மக்களாகப்பிறந்தோர் பெறுதற்குரியனவும் அரியனவுமாகிய பெரும்பேறுகளுள் ஒன்றேயாம் என்று கூறுதலில் தடை யாதுளது?