பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

முதற் குலோத்துங்க சோழன்

தீங்கிழைக்காதவாறு கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின் கீழ் நிலைப்படைகள் குலோத்துங்கனால் அமைக்கப்பெற்றன ; அவ்வாறு கோட்டாற்றில் நிறுவப்பட்ட படைக்குக் கோட்டாற்று நிலைப்படை' என்று பெயர் வழங்கிற்று.[1]

6. தென்கலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி. பி. 1096-ல் நிகழ்ந்தது. இப்போர் வேங்கிநாட்டில் அரசப்பிரதிநிதியாயிருந்த அரசிளங்குமரன் விக்கிரமசோழன் என்பான் தன் இளமைப்பருவத்தில் தென்கலிங்கநாட்டின் மன்னனாகிய தெலுங்கவீமன்மேற் படையெடுத்துச் சென்று அவனை வென்றதையே குறிக்கின்றது. இதனை விக்கிரமசோழனது: மெய்க்கீர்த்தி,

தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத்தருளி’

என்று தெளிவாக விளக்குதல் காண்க.

இப்போர் குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால் நிகழ்த்தப்பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்திலே நடைபெற்றதாதலின் மகனது வென்றிச் சிறப்பு தந்தைக்கேற்றியுரைக்கப்பட்டதென்றுணர்க.

7. வடகலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 42-ஆம் ஆண்டாகிய கி. பி. 1112-ஆம் ஆண்-


  1. S. I. I. Vol. III. No. 73. Do.page 144 Foot-note.