பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

53

-றுத் தம் மண்டலங்களை இழந்தவேந்தர் இத்துணைய ரென்றுரைத்தல் சாலுமோ ? ஆதலால் அத்தண்டின் முன்னர் நின் புயவலி எத்தன்மைத்தாகுமென்பதை எண்ணித் துணிவாயாக ; இன்று என்னைச் சீறினும், நாளை அச்சேனைமுன் நின்ற போழ்தினில் யான் கூறிய துண்மை யென்பதை நன்குணர்வாய் ' என்று நன்மதி நவின்றனன்.

அமைச்சர் தலைவன் கூறியவற்றைக் கேட்ட கலிங்க மன்னன் அவனை நோக்கி, ' யாம் கூறியவற்றை மறுத்துரைப்பதெனின் இமையோரும் எம் முன்னர்ப் போதரற்குப் பெரிதும் அஞ்சுவர். பன்னாட்களாகச் செருத் தொழில் பெறாது எம்தோட்கள் தினவுற்றிருத்தலை நீ அறியாய்போலும். முழைக்கண்ணுளதாய அரியேற்றின் முன்னர் யானையொன்று எளிதென்றெண்ணிப் பொருதற்குக் கிட்டிவருதல் உண்மையாயினன்றோ அபயனது படை எம்முடன் பொருதற்கெழும்! எமது தோள்வலியும், வாள்வலியும் பிறவலியும் இத்தன்மையன வென்றுணராது பிறரைப்போல் ஈண்டுக் கூறலுற்றாய். இது நின் பேதமையன்றோ ? நன்று ! நமது நாற்படையு மெழுந்து அபயன் ஆணையாற் போதரும் படையுடன் போர்தொடங்குக' என்றுரைத்தனன். அப்பொழுதே

பண்ணுக வயக்களிறு பண்ணுக வயப்புரவி
பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செரு நர் நண்ணுக செருக்களம்
நமக்கிகல் கிடைத்த தெனவே'

என்று எழுகலிங்கத்தினும் முரசறையப்பட்டது. உடனே, கலிங்கர் கோமானது படைகள் போர்க்குப் புறப்பட்டன; வரைகள் துகள்பட்டன; கடலொலிபோல்