பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

55

அம்புகள் தைக்கப்பெற்றுச் சுருண்டு விழும் யானைகளின் கைகள் வளையங்கள் போன்றிருந்தன. இருதொடையும் துணிபட்டுக்கிடந்த மறவர் தம் முன்னர்ப் பொருவானெழுந்த வாரணத்தின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி அதன்மீதெறிவர் ; மற்றொன்றை இனி எறியுமாறு எடுத்துவைப்பர் ; சில வீரர் தம் உரத்தின்மீது பாய்வான் எழுந்த இவுளியை ஈட்டியாற்குத்தி எடுத்துத் திரிவது வெற்றிமங்கைக்கு எடுக்கப்பெறும் வெற்றிக் கொடி போன்றிருந்தது. அன்னார் யானைகளின் மத்த கங்களைப் பிளக்குங்கால் வீழும் முத்துக்கள் அவ்வெற்றி மங்கைக்குக் சொரியப்பெறும் மங்கலப் பொரிகளை யொப்பனவாகும்; மாற்றார் சிலையில் அம்பைத்தொடுக்கு மளவில் தம்மிடத்து அம்பில்லாத வீரர்கள் தங்கள் மார்பினிற் குளித்த பகழியைப் பற்றியிழுத்துச் சிலையிற் றொடுத்துவிடுவர். குறையுடலங் கூத்தாட, அவற்றின் பின்னர்க் களிப்போடாடும் பேயினங்கள் ஆடல் ஆட்டு விக்கும் ஆடலாசிரியன்மாரை யொக்கும். சடசடவெனும் பேரொலியாற் செருக்களம், தீவாய் மடுக்கும் கழைவனம் போன்றிருந்தது.

இவ்வாறு போர் நிகழுங்கால் களப்போரினை விரை வில் முடித்து வாகை சூடுமாறு வண்டையர் அரசனாம் கருணாகரத் தொண்டைமான் தன் வேழ முந்துறச் சென்றனன், அவனது படையும் முன்னர்ச் செல்லலுற்றது. அங்ஙனஞ் செல்லவே கலிங்கப்படையின் மத யானைகள் துணிபட்டன ; துரக நிரையொடு தேர்கள் முறிபட்டன. குடர்கள் குருதியின் மேல் மிதந்தன; அவற்றைக் கழுகுகளும் காகங்களும் உண்டுகளித்தன ; ஆயிரம் யானைகளைக்கொண்டு ' பொருவம்' எனவந்த கலிங்கவீரர்கள், தங்கள் அரசன் உரைசெய்த ஆண்மை-