எட்டாம் அதிகாரம்
நம் குலோத்துங்கன் கொண்டொழுகியது பொதுவாக வைதிகசமயம் என்பது 'முந்நூல் பெருமார்பிற் சிறந்தொளிரப் பிறப்பிரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்[1]வேதங்கள் நான்கினையும் வேதியர்பாற் கேட்டருளி[2]னான் என்று ஆசிரியர் - சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியிற் கூறியிருத்தலால் நன்கு விளங்குகின்றது. ஆனால் இவன் வைதிக சமயத்தின் உட்பிரிவுகளாகிய சைவ வைணவ சமயங்களுள் சைவசமயத்தையே சிறப்பாகக் கொண்டொழுகியவன் ; சிவபெருமானிடத்து அவவுகடந்த பத்தி செலுத்தியவன். இவன் காலத்திற்கு முற்பட்ட சோழ மன்னர்கள் எல்லோரும் சைவராகவே இருந்திருப்பதோடு தில்லையில் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டும் வந்துள்ளனர். ஆதித்தன், முதற்பராந்தகன் முதலானோர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்து அதனைச் சிறப்பித்திருக்கின்றனர். நம் குலோத்துங்கனும் தன் முன்னோரைப் போலவே திருச்சிற்றம்பலத்தெம்பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு புரிந்துவந்தான். ஆயினும், தாம் மேற்கொண்ட சமயமொழிய மற்றைச் சமயங்களைக்