பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிவமயம்

முகவுரை

திருவாங்கூர் இராச்சியத்தின் கல்வெட்டுப் பரிசோதகர் காலஞ்சென்ற திரு. T. A. கோபிநாதராயர் அவர்கள் M. A. எழுதிய 'சோழவமிச சரித்திரச் சுருக்கம்' என்ற நூலை நான் படித்தபோது நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியரது வரலாறுகளை இயன்றவரையில் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவே, கல்வெட்டுக்களையும் செட்பேடுகளையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராயத் தொடங்கினேன். எனது ஆராய்ச்சியிற் புலப்பட்ட சரித்திர உண்மைகளை மதுரைத் தமிழ்ச்சங்கம். கரந்தைத் தமிழ்ச்சங்கம், இவற்றின் திங்கள் வெளியீடுகளாகிய 'செந்தமிழ்' 'தமிழ்ப்பொழில்' என்ற இரண்டிலும் அவ்வக் காலங்களில் நான் வெளியிட்டு வந்ததை அன்பர் பலரும் அறிவர். நம் தமிழகத்திலும் பிறநாடுகளிலும் தன் ஆணை செல்லச் செங்கோல் செலுத்திய சக்கரவர்த்தியாகிய முதற் குலோத்துங்க சோழன் வரலாற்றை விரித்தெழுதுவதற்குரிய கருவிகள் எனக்குக் கிடைத்தமையின் காலக் குறிப்புக்களுடன் இந் நூலை ஒருவாறு எழுதி முடித்தேன்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நாட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில் வெளிவருதல் பெருந் துணையாகும் என்பது அறிஞர்களது துணிபு. ஆதலால் , இது, முதலில் - 'தமிழ்ப்பொழில்' இரண்டு மூன்றாம் துணர்களில் வெளியிடப்பட்டது; பிறகு 1930-ஆம் ஆண்டில் தனி நூலாக வெளிவந்தது.