பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 23 பாவச் செயல்களே நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டிற் பொருந்தி யிருக்கின்ற இந்த வகையிலேயே துன்பங்களை இங்கே நான் அநுபவித்தல் ஆமோ (ஆகாது என்றபடி); உடல் என்னும் முட்டையிற் பொருந்தி இருந்து அது உடைந்து போம் படியான துன்பத்துக்கு இங்கு ஆளாகுதல் ஆமா - என்றுமாம். திறம் வாய்ந்த மகா தவசிகள் உள்ளம் கனிந்து உனது இரண்டு பாத தாமரைகளால் உய்திபெற்ற (ஈடேற்ப்பெற்ற) திருவேரகம் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (அலக்கண் இங்கண் உறலாமோ) 204 கண்ணால் மருட்டி நின்றும், கொங்கை மேல் உள்ள புடைவையை நீக்கியும், மூண்டு எழும் காமாக்கினியில் தம்மைக் கண்டவர் அழுந்தும்படி நகை புரிந்து விலையாக நிரம்பச் செம்பொன் வரவே (தமது சூழ்ச்சியைப்) பரப்பி, வஞ்சகம் நிறைந்த லீலைகள் செய்வதற்கு ஒருப்பட்டு, சில நாள் சென்றபின் சொல்லாத சொற்களைச் (சொன்னதாகச்) சொல்லிவந்து, (பின்னர்) சண்டையும் கூச்சலுமாகி ஏற்படுகின்ற பகைமை பூணும் முழு மாயக்காரிகளாகிய பிணங்களாம் பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு (நான்) முடிவுறாமல், (உனது) பொற் சதங்கைகள் (கிண்கிணிகள்) செய்யும் கீதமும், வெட்சி மலரும் சேர்ந்துள்ள என்றும் இளைய உனது நற்பதங்களைத் தந்தருளுக; பொழிகின்ற கரிய மேகத்தை நிகர்க்கும் யமராஜன் அஞ்சும்படி அன்று போர் வல்ல திருத்தாளை நீட்டிய தந்தையாம் சிவபிரான் மகிழ்ச்சி கொள்ளும் முருகனே ! இந்திரனது உள்ளங் குளிர்ந்த பொன்னுலகைப் (புரந்த) வல்லமை வாய்ந்தவனே! சுத்தனே! மான் ஈன்ற கரும்பன்ன வள்ளியை அணைக்கும் மார்பனே!