120 ↔ அ.ச. ஞானசம்பந்தன் போனால் விருந்தினரிடம் தோன்றும் விருப்பு வெறுப்பைக் காட்டிலும், ஒக்கல் என்று சொல்லப் படும் சுற்றத்தாரிடை விருப்பு வெறுப்புத் தோன்றுதல் இயல்பானதேயாகும். அவர்களிடம்கூட விருப்பு வெறுப்பு இல்லாமல் உபசரிக்கக் கூடுமேயானால் அதனை இல்லறத்தான் ஆற்றும் தவம் என்று கூறுவதில் தவறொன்றும் இல்லை. தவம் என்ற அதிகாரத்தில் காணப்பெறும் மற்றொரு குறளும் புதிய முறையில் பொருள் காணத் துண்டுகிறது. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (குறள்-266) என்ற இக்குறளில் முதலிரண்டு தொடர்கள் சிந்தனைக்குரியவை. தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார் என்ற பகுதியில் கருமம் என்ற சொல்லை எந்தப் பொருளில் ஏன் இந்த இடத்தில் ஆசிரியர் பயன்படுத்தினார் என்று சிந்திப்பதில் தவறில்லை. 'கருமம்' என்ற வடசொல் செயல், கடமை என்ற தமிழ்ச்சொற்களுக்கு நேரானது. அப்படியிருக்க, தவம் செய்வார் தம் கடமை செய்வார் என்றோ, தம் செயல் செய்வார் என்றோ, தம் பணி செய்வாரென்றோ கூறாமல் கருமம் என்ற சொல்லை ஆசிரியர் பயன் படுத்தியது ஏன்? . இல்லறத்தார்க்குரிய கடமைகள் என்று வரும் போது இது எல்லா இல்லறத்தார்க்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொதுவானது என்று கூறமுடியாது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப இல்லறத்தாரின் கடமைகள்கூட மாறுபடும்.
பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/148
Appearance