பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழய நினைப்பு

நேற்றவன் சேவகனாம்—இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே—உச்சி
ஏறி மிதித்தாண்டி!
சேற்று நிலத்தினிலே—ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்
தோற்றி மணியடித்தான்—அந்தத்
தொல்லை மணி ஓசை.
பழைய சேவகனின்—காதிற்
பட்டதும் வண்டி என்றே
பழய ஞாபகத்தில்—செல்லும்
பாதை குறிப்பதற்கு,
முழுதும் கைதூக்க—அவன்
முக்கரணம் போட்டு
விழுந்துவிட்டாண்டி!—அவன்
வீணிற் கிணற்றினிலே!


கொசு! உஷார்!!
(கும்மி மெட்டு)

கும்பகோணத்திற்குப் போகவேணும்—அங்குக்
கும்பலிற் சேர்ந்து நடக்க வேணும்
சம்பள வீரர் பிடிக்கவேணும்—அங்குச்
சாவுக்கும் அஞ்சாத தன்மை வேணும்!
கும்பலும் வீரரும் ஏதுக் கென்பீர்?—நல்ல
கும்பகோணத்தினில் என்ன என்பீர்?
அம்பு பிடித்த கொசுக்கூட்டம்—அங்கே
ஆட்களை அப்படியே புரட்டும்!

 

36