பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சுலட்சணா காதலிக்கிறாள்

படிக்கிற ஒரு மாணவரின் சிரமங்கள் கேலிக்குரியதாகப் படாமல்-நன்றாகப் படிக்கிற மற்றொரு மாணவருக்குத்தான் சீரியஸ்ஸாகப் புரிய முடிகிறது’- என்று உணர்ந்தாள் சுலட்சணா.

அத்தனை பரபரப்பிலும் ஆளைத் தேடிப் புத்தகத்தையும் கடிதத்தையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு சொல்லி அவன் ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருக்கிற பாங்கு அவளைக் கவர்ந்தது. ‘சின்ன விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பெரிய மனிதர்களாகும் வாய்ப்பை இழக்கிறார்கள்’-என்ற மேற்கோள் வாசகம் சுலட்சணாவுக்கு நினைவு வந்தது. அவள் கனகராஜின் சிரத்தையை நேசித்தாள்.

2

தயா பல்கலைக் கழகம் ஒரு ‘ரெஸிடென்ஷியல் யூனிவர்ஸி.டி.’ போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ், எம். ஃபில்., பி எச் டி. தவிர மற்றவற்றை அங்கே சேர்ந்துதான் படித்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லாமல்,ஓபன் யூனிவர்ஸிடி திட்டத்தின் கீழோ, தபால் முறைக் கல்வி மூலமோ படிக்கலாம். அதனால் பல்கலைக் கழக எல்லையில் பரபரப்புக் குறைவு.

மருத்துவப் பட்டப்படிப்புப் படிக்கும் எண்பது பேர், எஞ்சினியரிங் வகையில் ஒரு நூற்றைம்பது, விவசாயப் பாடத்தில் மேற்பட்டத்துக்கான நூறு பேர், ஆர்ட்ஸ், சயின்ஸ் வகையில் ஏறத்தாழ இருநூறு என்று தங்கிப்படிக்கும் மொத்த மாணவர் எண்ணிக்கையே ஐநூறு அல்லது அறு நூறைத் தாண்டாது. மொத்தம் ஐந்து ஹாஸ்டல்கள். எண்ணூறு ஏகர் நிலப்பரப்பில் ஒரு பெரிய காம்பஸ். தென்னை, மா, பலா என்று ஒரே சோலை மயமாக இருந்தாலும்-சில பகுதிகள் உள்ளேயே வெட்டவெளியாகவும் இருந்தன.