பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

193


தோற்றம் மட்டுமே ஆண்மையாகிவிடாது. ஆணின் இதயமுள்ளவன்தான் ஆண்மையாளன். ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் துணியாதவன் எப்படிப்பட்ட கொம்பனாயிருந்தாலும் இரண்டாம்பட்சமானவனே. அதுவும் பிறருடைய நலனைக் கருதி ரிஸ்க் எடுத்துக் கொள்கிறவனே ஆண் பிள்ளை' என்று எண்ணினாள் சுலட்சணா.

வீராசாமியின் வெட்டுண்டு வீழ்ந்த வலது கையில் ஐம்பது பைசா விலை கூடப் பெறாத ஒரு செப்பு மோதிரம் இருந்தது. அதில் சின்னஞ்சிறு பாரதியாரின் உருவத்தைச் செதுக்கியிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் வெட்டுண்ட பகுதிகளை இணைக்க முடியாதென்று முடிவானதும் அந்த ஆபரேஷன் தியேட்டரின் நர்ஸ் ஒருத்தி அந்த மோதிரத்தை மட்டும் கழற்றி உடனிருந்த சுலட்சணாவிடம் கொடுத்தாள். சொன்னாள்:

“நினைவு வந்து தேறி எழுந்தும் இந்த மோதிரத்தை அவரிடம் சேர்த்து விடுங்கள்...”

“கொடுப்பது சரி. ஆனால் இனிமேல் அவர் இதை எங்கே அணிவது சிஸ்டர்?"-கண்ணீர் மல்க கேட்டாள் சுலட்சணா. நர்ஸுக்கும் கண் கலங்கி விட்டது. போலீஸார் கைது செய்திருக்கும் பேட்டை ரவுடியை அவர்களும் சட்டமும் தண்டிக்கலாம். சில ஆண்டுகளுக்கு சிறையில் வைக்கலாம். ஆனால் அதனால் எல்லாம் வீராசாமிக்குப் போன கை வந்துவிடப் போவதில்லை.

மூன்றுநாள் கழித்து முதுகுளத்தூரிலிருந்து அவனது பெற்றோர் வந்து கதறிய கதறலைப் பார்த்தபோது சுலட்சணா இரத்தக் கண்ணீர் வடித்தாள். ‘இவன் படித்து வந்து ஆளாகிக் குடும்பத்தைக் கரையேற்றப்போகிறான்'- என்று கனவு கண்டுகொண்டிருந்த இந்த ஏழைகளின் கதி இனி என்ன? கையில்லாதவன் படித்த பின்என்ன செய்ய முடியும்?"- என்று எண்ணிப்பார்த்தபோது துயரம் நெஞ்சைக் கப்பியது சுலட்சணாவுக்கு.