பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

205



"யூ ஆர் டோட்டலி இன்கரெக்ட் கனகராஜ்! இட் இஸ் நாட் எ க்வஸ்ச்சின் ஆஃப் ப்யூட்டி அட்ராக்ஷன் ஆர் எனி சச் திங்...இட் இஸ் எ மேட்டர் ஆஃப் சிவிக்கரேஜ்.ஹி ஹாஸ் ஆம்பிள் ஆஃப் தட் குவாலிட்டி.."

பூங்காவிலிருந்து இவர்கள் வேறு திசையிலும் அவர்கள் வேறு திசையிலுமாகப் பிரிந்து போய் விட்டார்கள். கனகராஜை அவனுடைய விடுதி முகப்புவரை உடன் கொண்டுவந்து விட்டு ஆறுதலாக மேலும் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுத்தான் போனான் சுகவனம். கனகராஜ் தற்கொலை அது இது என்று பேசியிருந்ததால் எதற்கும் டீன் காதில் எச்சரிக்கையாக ஒரு வார்த்தை போட்டு வைக்க வேண்டுமென்று தோன்றியது சுகவனத்துக்கு. ஏனென்றல் சுகவனத்தின் உள்ளத்தில் வேறு பயம் இருந்தது. பைத்தியக்காரத்தனமாகக் கனகராஜ் ஏதாவது செய்து தொலைத்து விடக் கூடாதே என்பதுதான் அது.

டீனே அவர் வீட்டில் சந்தித்து ஜாடை மாடையாகக் கனகராஜ் பற்றித் தெரிவிக்க வேண்டியவற்றைத் தெரிவித்தான். டீனும் கனகராஜின் தந்தையும் நண்பர்கள்; உறவினர்கள் வேறு. டீன் விரும்பினால் கனகராஜின் தந்தையோடு ஃபோனிலேயே பேசி, உங்கள் பையன் ரொம்ப விரக்தியாயிருக்கிறான். அவன் மனநிலை சரியாயிருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ காதல் ஏமாற்றம் அது இது என்று மற்றப் பையன்கள் சொல்லுகிறார்கள். எதற்கும் ஒரு மாறுதலாக இருக்கட்டும். கொஞ்சநாள் வேணுமாணால் அவனை ஊருக்குத் திரும்ப அழைத்து உங்கள் பக்கத் திலேயே தங்க வைத்துக்கொண்டு பாருங்கள்'- என்று டீனே கனகராஜின் தந்தைக்கு அட்வைஸ் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளட்டும் என்றுதான் டீன் டாக்டர் (கை)ஆடல் வல்லான் பிள்ளையைப் பார்த்துப் பேசியிருந்தான் சுகவனம். ஆனால் ஆடல் வல்லான் பிள்ளையின் ரியாக்ஷன் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.