பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

19

வீட்டில் சம்பாதிக்கிற ஆண்பிள்ளை என்று யாருமே இல்லாமல் நாலைந்து பெண்களைக் கட்டிக் காத்து வளர்க்கும் ஒரு முதிய பெண்மணியின் வருமானம், வளர்ச்சி, செழிப்பு எல்லாமே கண்ணனுடைய பொறாமையைக் கிளறச் செய்திருந்தன. சினிமா, நாட்டியக் கச்சேரி, பெரிய பெரிய கம்பெனிகளின் 'லையஸான்' பி. ஆர். ஒ. ஆட்களின் போக்கு வரவு எல்லாமாக அம்மிணி அம்மாவுக்கு ஒரு டெலிபோனின் அவசியத்தை வலியுறுத்தின. அந்தக் காலனிக் குள் நுழைந்த முதல் டெலிபோனே அம்மிணி அம்மாவுடையதுதான். இரவிலும், பகலிலும், சிறிதும் பெரிதுமாகக் கார்கள் வருவதும் போவதுமாக அந்த வீடு-வீட்டு முகப்பு எல்லாமே கலகலப்பாக இருந்தன. அந்தக் காலனியில் அந்த வீட்டுக்கு மட்டும் ஒரு மினி பங்களாவின் ஆடம்பரத் தோற்றம் வந்திருந்தது. மற்ற எல்லா வீடுகளுமே கோழிக் கூண்டுபோல் வீட்டுவசதி வாரியத்தின் சாதாரண 'டி' டைப் வீடுகளாகத்தான் இருந்தன. மாறுதலோ வளர்ச்சியோ மெருகோ பெறவில்லை.

கண்ணன் அம்மிணி அம்மாவை அந்தக் காலனியே சமூக பகிஷ்காரம் செய்து ஒதுக்கித் தள்ளும்படி ஆக்கிவிட ஆசைப்பட்டான். ஆனால் அதற்கு நேர்மாறாக ஏங்கல் தாங்கல்-அவசர ஆத்திரத்திற்கு டெலிபோன் செய்ய அக்கம் பக்கத்தார் அம்மிணி அம்மாவின் தயவை நாட வேண்டியிருந்தது. அந்த வீட்டின் மேலும் அந்தக் குடும்பத்தின் மேலும் தனக்கு இருக்கும் அதே வெறுப்பை மற்றவர்கள் பால் திணிக்க முயன்றும் கண்ணனால் முடியவில்லை. அக்கம்பக்கத்தாருக்கும் மற்றவர்களுக்கும்.அந்த அம்மாளின் தாட்சண்யம் தேவைப்பட்டது. கண்ணன் அந்த அம்மாள் என்ன செய்கிறாள் என்பதாகத் தான் கேள்விப் பட்டிருந்தானோ அதை வைத்தே வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்களோ அந்த அம்மாளின் உபகார குணம், இங்கிதம், பழகும் பண்பு இவற்றைக் கவனித்துப் பழகினார்கள்.