பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

சுலட்சணா காதலிக்கிறாள்

 திரும்பியதும் கனகராஜுக்கே ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதி மெஸ் பையன் மூலம் காலையில் கொடுத்தனுப்ப முடிவு செய்தாள் சுலட்சணா.

அந்தக் கடிதம் போன்றதொரு கோபமான அதிர்ச்சியைக் கனகராஜுக்குத் தர அவள் விரும்பவில்லை என்றாலும் மேலும் மேலும் அவன் யார் மூலமாவது தன்னிடம் சமரசப் பேச்சுக்கு முயலக்கூடாது என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடவே அதை எழுதினாள்.

மாலையில் பூங்காவில் தான் மறுபுறம் வீராசாமி யோடு அமர்ந்திருப்பது தெரியாமல் அவன் அந்தப் பக்கத்திலிருந்து கொண்டு சுகவனத்திடம் பேசிய பேச்சுக்களை எல்லாம் அவள் கேட்டிருந்தாள். அதனால் டீன் சொல்லிய எதிலும் அவள் சந்தேகப்படவே இல்லை. டீன் கூறிய பரிதாபகரமான விரக்தி நிலையில்தான் கனகராஜ் இருந்தான் என்பதை அவளே உணர்ந்திருந்தாள். ஆனாலும் அவனுக்கு அவள் எழுதிய கடிதத்தில் ஈரமோ ஈவு இரக்கமோ எதுவும் காண்பிக்கப்படவில்லை, தீர்மானமாக அவனுக்குப் புரியும்படி எல்லாம் எழுதிவிட்டாள். -

இரக்கத்துக்காகவோ, சிபாரிசுக்காகவோ ஒரு தொடை நடுங்கியை விரும்புவது என்பது அவளால் முடியாத காரியம். பணத்துக்காகவோ, பதவிகளுக்காகவோ, பாரம்பரியப் பெருமைக்காகவோ ஒருவரைக் காதலிப்பது என்பது அவளது கொள்கைக்கு ஒரு சிறிதும் ஒத்துவராத விஷயம். ஆனால் இவைகளை எல்லாம் விவரிக்காமல் சுருக்கமாகவே கனகராஜுக்கு எழுதியிருந்தாள் அவள்.

மறுநாள் காலையில் அவன் சேலம் புறப்படும் முன்பாக மெஸ் பையன் மூலம் தான் எழுதிய கடிதத்தைக் கனகராஜுக்குக் கொடுத்தனுப்புவதற்குத் தயாராக இரவே உறையில் போட்டு வைத்து விட்டுத்தான் படுத்தாள்

சுலட்சணா.