பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

219


நெடுநேரம் வரை அவளுக்கு உறக்கம் வரவில்லை. சுபாவத்தில் மிகவும் கோழையாகிய கனகராஜை இந்தக் கடிதம் என்ன பாடுபடுத்தும் என்று நினைத்தபோது அவளுக்கும் வருத்த மாகத்தான் இருந்தது. அவனால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதுதான்.

டீன் சொல்லியது போல் இந்த ஏமாற்றத்தைத் தாங்காமல் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது? என்பதை எண்ணியபோது அவள் உடல் சிறு நடுக்கத்தால் அதிர்ந்து குலுங்கி ஒய்ந்தது.

என் தற்கொலைக்குச் சுலட்சணாவே காரணம் என்று அசட்டுத் தனமாக எழுதி வைத்துவிட்டு இறந்து தொலைத்தால் அதில் நம் தலை அநாவசியமாக உருளுமே-என்றுகூட நினைத்தாள்.

அடுத்த கணமே நினைப்பை வீராசாமியின் பக்கம் திருப்பினாள். வலது கையை இழந்து மூளியாகியும் தற்கொலையைப் பற்றியே எண்ணாமல் நம்பிக்கையோடு வாழ்க்காத்திருக்கும் அந்த ஏழைத் துணிச்சல்காரனை நினைத்துக் கொண்டபடி கனகராஜை நினைவிலிருந்து மெதுவாகவும், நிச்சயமாகவும் அகற்றி வெளியேற்றினாள்.

11

முந்திய இரவு இது நடந்த பின் மறுநாள் காலை டீன், கனகராஜைக் கூப்பிட்டு அனுப்பினார். கனகராஜ் அவரை அதிகாலையில் அவரே கூப்பிட்டனுப்பியபடி வீட்டில் போய்ப் பார்த்தான்.

“உங்கப்பா கார் அனுப்பிவைக்கிறதாகப் போன் பண்ணினாரு. ஊர்ல போய்க் கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் வா”