பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

முள் வேலிகள்

கண்ணனுக்கு எரிச்சலூட்டியிருக்கும் என்பதைப் பாகவதரும் அம்மிணி அம்மாவும் உள்ளூர உணர்ந்தே இருந்தனர்.

அன்றைய கூட்டம் எல்லாம் முடிந்து சங்கத் தலைவரும், பொருளாளரும் தானும் மட்டும் தனியானபோது கண்ணன் மெல்ல ஆரம்பித்தான். "எனக்கு ஒரு சின்ன சந்தேகம்! இந்த மலையாளத்து அம்மாவையும் இஞ்சிக்குடியாரையும் பற்றி ஊர்லே ஒரு மாதிரிப் பேசிக்கிற சூழ்நிலை இருக்கு, சில பேப்பர்களிலே கூட ஏதோ இவங்க ரெண்டு பேரையும் பத்தித் தாறுமாறா வந்திருக்குன்னு கேள்விப் பட்டேன். இவங்களைப் போய்க் கோயில் கமிட்டியிலே போட்டிருக்கோமே?"

"கமிட்டியிலே நாமா போட்டோம்? ஜெனரல் பாடியின்னா விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கு. பாகவதர் ரொம்பப் பிரபலமா இருக்கார். அவர் குருவாயூரப்பன், ஐயப்பன் சந்நிதிகள் வேணும்னு சொல்லி முடிக்கிறத்துக்குள்ளே அந்தம்மா எழுந்திருந்து அதுக்கான அத்தனை செலவையும் ஒத்துக்கறேன்னுட்டா. இதெல்லாம் பார்த்து மத்தவங்களுக்குப் பிரமாதமாப் படத்தானே செய்யும்?" என்றார் தலைவர்.

"நாமும் இதிலே, சம்பந்தப்பட்டிருக்கோமே! . அதான் பார்க்க வேண்டியிருக்கு..."

"அவா ரெண்டு பேரோட பெர்ஸனல் லைஃபைப் பத்தி நாம என்ன பண்ணமுடியும்? நாடு இன்னிக்கு இருக்கிற நிலைமையில் எத்தனையோ பெரிய பாலிட்டீஷியன்ஸ், தொழிலதிபர்கள், வியாபாரிகள் இவங்களோட பெர்ஸனல் கேரக்டர்னு பார்த்தோம்னா ஒருத்தர் கூடத் தேர்றது கஷ்டம்."

"அதுக்கில்லே! கோயில் விஷயமாச்சேன்னுதான் பார்த்தேன்! வேற ஒண்ணுமில்லே."