பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

49

"அதெல்லாம் ரொம்ப டீப்பா ஒண்னும் பார்க்காதீங்க கண்ணன்! பட்டும் படாமலும் இருந்துக்குங்க! நமக்குக் காரியம் ஆகணும். கோயில் கட்டி முடிக்கிறோமா இல்லையாங்கிறதை வச்சுத்தான் நம்ம கமிட்டிக்கு ஊர்ல மரியாதை. கோவில் கட்ட மனுஷா உதவியும், பணமும் வேணும். பணம் யார் தரான்னு தேடி வாங்கிக்கணுமே ஒழிய அது எப்பிடிப் பட்டவா கையிலேருந்து வரதுன்னு வீணா ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கறதுலே பயனில்லே! முதல்லே இதை நீங்க புரிஞ்சிக்கணும்."

சங்கத் தலைவர் இவ்வாறு கூறியதிலிருந்து இந்த விஷயத்தில் தன்னளவு மனச் சங்கடம் அவருக்கு இல்லையென்று கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. நண்பன் பாகவதரையும், அம்மிணி அம்மாவையும் பற்றி 'பிளாக் மெயில்’ செய்வது போல் தோன்றுவதையே பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தாலும் கண்ணனுடைய அடி மனத்திலும் அவர்கள் இருவர் மேலும் ஏதோ ஒரு துவேஷம் முளைக்கத் தான் செய்திருந்தது. அடுத்த வீட்டுக்காரர்கள், உத்தியோகங்களில் அடுத்தடுத்த நிலையிலிருப்பவர்கள், சக்களத்திகள், மாமியார் மருமகள், எலியும் பூனையும் என்று இவர்களுக்கிடையே இனம் புரியாத வெறுப்பும் விரோதமும் கடவுளாலேயே படைக்கப்பட்டு விட்டதோ என்னவோ தன்னளவுக்குத் தன் மனைவியோ குழந்தையோ கூட அம்மிணி அம்மாவையும், பாகவதரையும் வெறுக்கவோ, விரோதித்துக் கொள்ளவோ தயாராயில்லை என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான். தான் இதில் தனித்து ஒதுக்கி விடப்பட்டு விட்டோமோ என்றுகூட அவன் உள்ளத்தில் தோன்றியது. தன்னை எதிரியாகப் பாவிக்காத இரண்டு பேரைத் தான்மட்டும் எதிரிகளாகப் பாவிப்பதும வெறுப்பதும் ஏன் என்று அவனுக்கே புரியவில்லை. மர்மமாக இருந்தது. வெறுப்பை விடவும் முடியவில்லை. தவிர்க்கவும் இயலவில்லை.