பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

முள்வேலிகள்

வரேன். எதிர்க்கிறவங்களை ஒரு கை பார்த்திடலாம்' என்றார் மகிழ்மாறன்.

அப்படிச் செய்யக் கண்ணனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் செயற்குழுவைக் கூட்டுவதற்கு முன்பே தான் ராஜினமாச் செய்வது கோழைத்தனமாகப் புரிந்துகொள்ளப் படும் என்பதால் தயங்கினான். பொறுமையாக இருக்க முடிவு செய்து கொண்டான்.

அவசரச் செயற்குழு கூடுவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அவன் மனைவி சுகன்யா அவனிடம் தற்செயலாக ஒரு நாள் விசாரித்தாள்: இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு? இருக்கிற பணமுடையிலே என்னென்னமோ புதுப் புதுத் தெண்டச் செலவெல்லாம் இழுத்து விட்டுக்கறீங்களே? வக்கீலுக்குப் பணம் அழுது ஒண்ணுமில்லாததுக்கு நோட்டிஸ் அனுப்பி அக்கம் பக்கத்தாரை மிரட்டியிருக்கீங்க, காம்பவுண்டுச் சுவர் எடுக்கிறேன்னு ஆயிரக் கணக்கிலே வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கீங்க...யாரோ போர்டெல்லாம் தமிழ்லேதான் எழுதணும்னு தார் பூசி அழிக்கிறவங்களுக்கு முதல் ஆளா ரூபாய் ஆயிரத்துக்கு மேலே டொனேஷன் குடுத்திருக்கீங்களாம். எதுக்கு இப்பிடிப் பணத்தைப் பாழாக்கறீங்க?"

"நான் புலவர் மகிழ்மாறனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேலே குடுத்தேன்னு உனக்கு யார் சொன்னது?"

"அடுத்த தெருவிலே கலா படிக்கிற ஸ்கூல் ஹெட் மிஸ்ட்ரஸ் எதக்கோ ரெண்டு ரூபா டொனேஷன் கேட்டுக் கலாவை வீட்டுக்கு அனுப்பிச்சா. நான் அவ்வளவு இல்லேன்னு எங்கிட்ட இருந்ததைத் திரட்டி ஒரு ரூபா குடுத்தனுப்பிச்சேன். அவ உடனே, கலா கிட்ட, ஏண்டி! உங்க அப்பா தமிழர் படை தார் பூசறத்துக்கு ஆயிரம் ரூபாய் டொனேஷன் தர்றர். இதுக்கு மட்டும் ஒரு ரூபாதானா?' ன்னு கேட்டாளாம்,"