பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

89

"யாரோ ஒரு ரெளடி சில மாதங்களுக்கு முன்னே எல்லா வீட்டுச் சுவர்லியும் தார்ல எழுதி வம்பு பண்ணினானே; அவனைக் கண்டிச்சீங்களா? இனிமே அதுமாதிரி நடக்காமே உங்க அஸோஸியேஷன் என்ன செய்யப் போறது?" என்று ஆத்திரமாகக் கண்ணனை வினவிய சில வீடுகளில் அவன் புலவரை அறிமுகப்படுத்தாமலேயே திரும்ப வேண்டியதாயிற்று.

"அந்தப் பழைய அஸோஸியேஷன் மாதிரிக் கோயில் குளம்னு மட்டுமே அலையாமே நாங்க அ. அ. க. விலே ரெக்ரியேஷன் கிளப் எல்லாம் ஏற்படுத்தப் போறோம். டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், ஃபுட் பால், இன்னும் இண்டோர் கேம்ஸ் அது இதுன்னு யூஸ்ஃபுல்லா இருக்கிறாப்பல" என்று புலவர் ஆரம்பித்ததுமே, 'இந்த அவசர வாழ்க்கையிலே கேம்ஸுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?" என்று நைஸாகக் கழற்றிக் கொண்டார்கள் சிலர்.

காலனி முழுவதும் அலைந்துவிட்டுப் பகல் மூன்று மூன்றரை மணிக்குத் திரும்பியபோது மூன்றே மூன்று உறுப்பினர்களை மட்டும்தான் அ. அ. க. வில் சேர்க்க முடிந்திருந்தது. புலவர் கண்ணனிடம் குறைப்பட்டுக் கொண்டார்.

"இந்தக் காசு நம்ம பசங்களுக்கு டீ செலவுக்குக் கூடப் பாத்தாதுங்க."

"என்ன செய்யறது? யாரும் சேர மாட்டேங்கிறாங்களே? உம்ம ரெக்ரியேஷன் கிளப் ஐடியாகூட எடுபடலியே?"

"மாசம் ரெண்டு சினிமா காட்றோம்ன்னு சொல்லிப் பர்க்கலாமா?"

"அதெல்லாம் தியேட்டர்லியே போய்ப் பார்த்துப்பாங்க. போறாக்குறைக்கு டெலிவிஷன் வேற இருக்கு. அதுக்காக உங்க சங்கத்திலே வந்து சேரமாட்டாங்க."

"எப்பிடியாவது அந்த அஸோஸியேஷனைப் பழி வாங்கியே ஆகணுங்க! ஒண்னும் இல்லேன்னாக் கடைசி