பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

முள்வேலிகள்

சொல்லிக் கூப்பிடட்டுமா?" என்று கண்ணனருகே வந்து வினவினாள்.

கண்ணனுக்கு இதைக் கேட்டு ஓரளவு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. தன் மனைவி குழந்தையுடன் அம்மிணியம்மாள் வீட்டில் அமர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லை சில சமயங்களில் தன் மனைவியும், குழந்தையும் பக்கத்து வீட்டாரோடு தன்னைப் போல் அல்லாமல் சுமுகமாகப் பழகக் கூடும் என்ற எண்ணம் அவனுள் ஏற்பட்டிருந்தாலும் தான் காலனி அஸோஸியஷனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் இந்த நிலைமை மாறியிருக்கும் என்று கண்ணன் நம்பினான். அவ்வளவேன்? அவனே தன் மனைவி சுகன்யாவிடம் பகிரங்கமாக எச்சரிக்கக்கூட எச்சரித்திருந்தான். "இதுவரை எப்படியோ-இனிமேல் இரண்டு பக்கத்து வீட்டாரோடும் பழகுவதில் அர்த்தமே இல்லை. இவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னை நான் வளர்த்து உருவாக்கிய அஸோஸியேஷனிலிருந்தே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வெளியேற்றி விட்டார்கள். இனி இவர்களோடு நீ சகஜ உறவு வைத்துக் கொள்வது என்பது என் ஜன்ம விரோதிகளுடன் வலுவில், நீ பழகுவது போல் தான். ஜாக்கிரதை."

"உங்களுக்காக நாங்க பேச்சு வார்த்தையை முறிச்சுக்கணுமா என்ன?" என்றுகூடச் சுகன்யா அப்போது அவனைக் கேட்டிருந்தாள். அவள் அப்படிக் கேட்டது அவனுக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கி விட்டது.

"புருஷனுக்கு அவமானத்தை உண்டாக்கிவிடறவங்கள்ளாம் யாரோ அவங்களோடு பழகறதுதான் உனக்கு மகிழ்ச்சின்னா நீ பேச்சு வார்த்தையை முறிச்சுக்காமப் பழகலாம்" என்று அப்போது மனைவியிடம் கடுமையாகப் பதில் கூறியிருந்தான் கண்ணன். இவ்வளவு கடுமையாகத் தான் எச்சரித்திருந்ததால் அவள் இனிமேல் அக்கம்பக்கத்தாரோடு