பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

முள்வேலிகள்

"இது கெளரவமான குடும்பம். தப்புப் பண்றவங்களைத் தண்டிச்சுத் திருத்தறதுதான் இந்த மாதிரி மானமுள்ள குடும்பங்களில் வழக்கம். உங்க வீடு மாதிரி மான ரோஷம் எல்லாம் வித்து முதல் பண்றவங்க எப்பிடி வேணுமானா இருக்கலாம். நாங்க அப்படி இருக்க முடியாதே?"

இதைக் கேட்டு அம்மிணியம்மாள் கோபப்படவில்லை யானாலும் கூட இருந்த அவளது மகள் நந்தினி கடுங் கோபத் தோடு, "மிஸ்டர் கொஞ்சம் நாக்கை அடக்கிப் பேசுங்க! சுகன்யா அக்காவுக்காக உங்களுக்கும் மரியாதை குடுத்துத் தொலைக்க வேண்டியிருக்கு இல்லாட்டி நடக்கறதே வேறே" --என்று பதில் கொடுத்தாள்.

கண்ணன் சீறினான். அம்மிணி அம்மாள் தன் மகளின் வாயைப் பொத்தித் தடுக்க முயன்றாள்.

"ஐ ஸே கெட் அவுட், போங்க வெளியிலே...உங்களை இங்க யாரும் கூப்பிடலே"-என்று அவர்கள் முகத்திலடித்த மாதிரி வாயிற் கதவை அறைந்து சாத்தினான் கண்ணன்.

தன் மேல் பாய்ந்த கோபம் வீடு தேடித் தன்னைக் காப்பாற்றும் நல்லெண்ணத்தோடு வந்தவர்கள் மேல் திரும்பியது கண்டு சுகன்யா வருத்தப்பட்டாள். தனிப்பட்ட முறையில் ஏங்கல் தாங்கலில் தனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கக் கூடிய அம்மிணி அம்மாளையும் நந்தினியையும் வெளியே போகச் சொல்லிக் கணவன் கதவை அடைத்தது கண்டு அவள் பொறுமை இழந்தாள்.

"என்னத் திட்டுங்க, அடியுங்க, உதைங்க...ஏத்துக்கிறேன். வீடு தேடிப் படியேறி வந்த அவங்களை ஏன் கன்ன பின்னான்னு பேசினீங்க? இது உங்களுக்கே நல்லா இருக்கா?"

"அவங்க என்னடி அவங்க? இந்த மாதிரிப் பொழைப்பு நடத்தற ஜன்மங்களுக்கு மரியாதை ஒரு கேடா?"