பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

பெரும்பாலான கப்பல்கள் போர்ச்சுகீசியரின் பிரங்கித் தாக்குதலினால் தீப்பற்றி அழிந்தன. உயிரிழப்பும் மிகுதியாக இருந்தது. வேதாளை கிராமத்து வடக்குப்பள்ளிவாசல் மைய வாடியில் உள்ள ஏராளமான மீஸான்கள், அந்தப் போரில் வீரமரணம் எய்திய இசுலாமியரது தியாகத்தை மட்டுமல்லாமல் தமிழக கடல் வாணிப வளத்தை நிரந்தரமாக இழந்துவிட்ட இசுலாமியரது சோக வரலாற்றையும் நினைவுபடுத்துவதாக உள்ளன. எட்டாம் நூற்றாண்டில் சீனக் கடலில் இருந்து செங்கடல் வரை பச்சைப் பிறைக் கொடிகளையும், பளபளக்கும் பதாகைகளையும் தாங்கி பவனி வந்த இசுலாமியரது வாணிபக் கப்பல்கள், வழிதவறிய ஒட்டகங்கள் போல, எங்கோ சென்று மறைந்தன. உலக நியதிக்கு ஒப்ப, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பரவும் கதிரவனது ஒளிக்கதிருக்கு மாறாக, மேற்கே இருந்து கிழக்கே பாய்ந்து பரவியதினால் இசுலாம் என்ற ஒளி வெள்ளத்தை தங்களது இதயங்களில் தேக்கியவாறு அந்தக்கப்பல்களில் சென்று, கீழை நாடுகளில் எங்கும் சமயப்பிரச்சாரம் செய்த வலிமார்கள், பக்கீர்கள், முஹாஜிரீன்கள்-ஆகிய தொண்டர் திருக்கூட்டத்தின் நடமாட்டமும் முடமாக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒரு நூற்றாண்டு வரை போர்ச்சுகல் பரங்கிகள் இலங்கை அரசியல் ஆதிக்கத்திற்கு போராடியதால் தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அத்துமீறல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. மாறாக, மலேஷியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் ஆகிய வாசனைப் பொருட்களை மிகுதியாகவும் விரைவாகவும் ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கரை காட்டினர். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் மன்னார் முத்துக்களைவிட, அந்த வியாபாரம் அவர்களுக்குப் பெருத்த ஆதாயம் அளிப்பதாக இருந்தது. என்றாலும், அவர்கள், தமிழக கடற்கரையில் சமயத்தைப் பரப்புவதிலும் "அஞ்ஞானிகளை" மதம் மாற்றுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். லேவியர், ஹென்றிகஸ் ஆகிய கத்தோலிக்க கிறித்தவ பாதிரியார்களது வாழ்க்கை குறிப்புகள் இதனை விவரிக்கின்றன.[1] நாளடைவில்


  1. Dorsey - Portughese Discoveries, Missions in Asia and Africa р.147