பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

தில் மேற்கொண்டு இருந்தனர். அவர்களது சமய நூலான நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு விரிவான உரைகளை மிகுதியும் வடமொழிச் சொற்களின் துணைகொண்டு புதிய உரை நடையொன்றில் அவர்கள் வரைந்துள்ளார். அவை தமிழ் உரையாக இருந்தாலும், அவைகளின் வரி வடிவம் கிரந்தத்தில் உள்ளது. சில உரையாசிரியர்கள் இந்த கிரந்த எழுத்துக்களுக்கிடையில் வடமொழிச் சொற்களையும் அப்படியே வழங்கி உள்ளனர். இதனை "மணிப்பிரவாள நடையென" இணைத்து பெயரிட்டனர். நாட்டு விடுதலைக்குப் பின்னர், மொழி உணர்வுப் பற்று காரணமாக அண்மைக் காலத்தில் இந்த தமிழ் நடை கைவிடப்பட்டு மறைத்துவிட்டது.

எனினும், இதனையொத்த அரபுத் தமிழ், தமிழக இஸ்லாமியரிடையே இன்னும் வாழ்ந்து வருகிறது. வழக்கில் இருந்தும் வருகிறது. அரபு மொழியில் உள்ள கலைஞானங்களை அறிந்து கொள்வதற்கான எளிய சாதனமாக தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. இந்தவகைத் தமிழில் படைக்கப்பட்ட தொன்மையான ஆக்கங்கள் எதுவும் நம்மிடையே இன்று இல்லை. ஆனால் இருநூற்று ஐம்பது ஆண்டு கால வரையறைக்குட்பட்ட அரபுத் தமிழ் நூல்கள் மட்டும், தமிழகத்திலும் ஈழத்திலும் மார்க்க கல்வி பெறும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருந்து வருகின்றன. இவைகளுள் வள்ளல் சீதக்காதியின் ஆசானாக விளங்கிய ஞானி சதக்கத்துல்லா (வலி) வின் இளையரும் அரபு வித்த கருமான ஞானி ஷாம் ஷிகாபுதீனது அரபுத்தமிழ் நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இங்ஙனம் தமிழக இசுலாமியரின் தமிழ்-அரபுத் தமிழாக வளர்ந்து அடுத்த சில நூற்றாண்டுகளில் தனித்தமிழாசி காப்பியத் தமிழாக மணங்கமழ வழி துலக்கியது.

இவ்விதம் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர், அதே காலத்தில் பிற சமயத்தினர், பல துறைகளைச் சேர்ந்த பலநூறு இலக்கியங்களைத் தமிழில் படைத்து இருப்பதை படித்து அறிந்தனர். பிற்காலத்தில் பெளத்த, சமண, வைணவச் சார்புடைய சமய இலக்கியங்களாக அவை பகுக்கப்பட்டுள்ளன. சமயப் பற்றும், சமுதாயப் பிடிப்பும் தாய் மொழித் தேர்ச்சியும் விஞ்சி ஒளிர்கின்ற அந்த நூல்களை காதாறக் கேட்டு, கண்குத்திப் படித்துச் சுவைத்தும் அவைகளின் இனிமையில் ஈடுபட்ட அவர்களது இதயம், தங்களது சமயநெறிகளை