உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95 / மூட்டம்

☐சு.சமுத்திரம்

‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்மா, இன்ஸா அல்லா. பத்திரமாய் வீட்டுக்குத் திரும்புவோம். ஏன்னா எங்க பக்கம் அல்லா மட்டும் இல்ல. ஸ்ரீராமரும் இருக்கார்.’

எல்லோரும் எழுந்தார்கள். கையில் மோரை வைத்திருந்த ஆயிஷா முத்துக்குமாரை மட்டும் தனிப்படுத்தி அதைக் கொடுப்பது முறையில்லை என்பது மாதிரி தயங்கினாள். இதற்குள் எல்லோரும் வீட்டுக்கு வெளியே வந்தார்கள். ஆயிஷா, வாசலிலே சரிபாதி நின்றபடி பின்பக்கமாக மறைத்து வைத்த அந்த மோர் டம்ளரை முத்துக்குமாரின் தலை நிமிரும் போதெல்லாம் அவன் கண்ணில் படும்படி முன்பக்கம் கொண்டு வந்தாள். வேறு கண்கள் படும்போது அதைப் பின் பக்கமாகக் கொண்டு போனாள். எப்படியோ முத்துக்குமாரின் கண்களில் அவளும், அவள் கை பிடித்திருந்த மோர் டம்ளரும் பட்டுவிட்டது. புரிந்து கொண்டான். ஆட்டோ உருமிக் கொண்டிருக்கும்போதே அவன் உள்ளே ஓடி வந்தான். அவள் அவன் கையில் தன்கை படாமல் இருக்க அந்த டம்ளரை ஒரு முக்காலியில் வைக்கப் போனபோது, அவன் அந்தக் கையோடு சேர்த்து மோர் டம்ளரைப் பிடித்தான். அவள், அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். ‘ஜாக்கிரதையாப் போங்க. நீங்க திரும்பி வரது வரைக்கும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருப்பேன்’ வெளியே நின்றவர்கள் ‘முத்து, முத்து’ என்று கத்தினார்கள். முத்துக்குமார் அவளை உற்றுப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு மோரைக் குடித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தான்.

பீடித் தொழிலாளர்கள் கைதட்ட, முத்துக்குமாரும் காதர்பாட்சாவும் அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள். ஆட்டோ பறந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களும் துண்டுப் பிரசுரங்களோடு போய் விட்டார்கள். ஆயிஷா அந்த ஆட்டோவை முத்துக்குமாராக அனுமானித்து ஒரு கையில் கண்களைத் துடைத்தபடி இன்னொரு கையை ஆட்டினாள். ஒரு கரம் அப்படி ஆட்டிய கரத்தைக் கவ்விப் பிடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/97&oldid=1844496" இலிருந்து மீள்விக்கப்பட்டது