பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

விட்டால், ஒரு தொல்லையான பணியிலிருந்து விடுபடலாம். எனவே, விழிப்போடு கோத்தல் களிப்போடு பணியாற்றத் துணையாகும்.

அச்சுக் கோப்பவர் நன்கு கற்றவராய் இருந்தால் பிழையின்றிக் கோத்தல் முடியும். பள்ளியில் கற்க வாய்ப்பில்லாதவர்கள், தம் சொந்த முயற்சியில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளுதல் பெரும்பயன் தருவதாக இருக்கும்.

அச்சுக் கோப்பவர் வெறும் வரி அடுக்கும் வேலை மட்டும் பழகிக் கொண்டால் போதாது. பல்வகை அச்சு வேலைகளும் (Jobs) செய்யத் தன்னைத் தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். அச்சகம் தொடர்பான எல்லா வேலைகளும் தெரிந்து வைத்திருத்தல் பெரிதும் பயன் தருவதாக இருக்கும். மிகச் சிறிய அச்சகங்களில், ஒவ்வொரு வேலைக்கும் தனியாள் வைக்க இயலாது. அங்கெல்லாம் பணியாற்ற அனைத்து அச்சக வேலைகளும் தெரிந்தவர்களே பயன்படுவார்கள்.

பலவகை எழுத்துக்களும் கலந்து குப்பையாகும் அச்சுப் பெட்டி வேலைக்குப் பயன்படாது. குப்பையான அச்சுப் பெட்டியை அச்சகங்களில் பையாகிவிட்டது என்பார்கள். (பை-குப்பை)

அச்சுக் கோப்பாளர் தன் அச்சுப் பெட்டியை பையகாமல் வைத்துக் கொள்ளவேண்டும். பிரித்துப் போடும் போது சரியாகப் பிரித்து போட வேண்டும். வெவ்வேறு வகை எழுத்துக்களை அவ்வவற்றிற்குரிய பெட்டிகளில் போட வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள இடத்தைக் குப்பை கூளமின்றித் துய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பணிசெய்யும் அச்சுக் கோப்பாளர் தன் பணியில் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும். பணிபுரியும் போது வேறு நினைப்புகள் இருக்கக் கூடாது. பிழையின்றி அச்சுக் கோக்க வேண்டுமானால் அருகில் இருப்போருடன் பேசுதல் கூடாது.