பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் படித்தவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், படிக்காதவர்கள் செல்வர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். கல்வி உள்ள இடத்தில் செல்வம் சேராது என்றும், கலைமகளும், திருமகளும் ஒன்றாய் இருப்பதில்லை என்றும் கதைப்பார்கள்.

அந்தக் காலம் மலையேறி விட்டது. இன்றைய நிலையில் கற்றவர்களே செல்வர்களாக இருக்க முடியும்.

கல்வித் தெய்வத்தைக் கல்விமகள் என்று சொல்லாமல், கலைமகள் என்று அழைப்பதில் உள்ள நுட்பத்தைச் சிந்திக்க வேண்டும். கலைகள் அனைத்தும் தொழில்களாகவும்-தொழில்களின் உயர்நிலைகளாகவும் உள்ளன.

தொழில் செய்பவனின் உழைப்புத் திறத்தில் தான் உலகம் வாழுகிறது. எவனொருவன் தொழிலில் ஈடுபாடும் அறிவுத்திறனும் உள்ளவனாக இருக்கிறானோ அவனிடத்தில் செல்வம் மலைபோலக் குவிகிறது.

கல்வி என்றால் சில இலக்கியங்களை நெட்டுருப் போட்டு வைத்துக் கொள்வது என்ற கருத்தில் வளர்ந்துவிட்ட அந்தக் காலத்துப் பண்டிதர்கள் பிறர் கையை எதிர்பார்த்து வாழ வேண்டிய ஈன நிலையில் இருந்தார்கள்.