பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அச்சுத் தொழில் பயில விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான பயிற்சிகளை இந்நூல் தெளிவாகக் கொடுக்கிறது.

நம் நாட்டில் எழுத்துக் கோப்பு அச்சுமுறை (Letter Press) இன்றைக்கும் தேவைப்பட்ட நிலையில் தான் உள்ளது.

அச்சுத் தொழில் பயில விரும்புபவர்களுக்கு தேவையான குறிப்புகள், பயிற்சிகள், விளக்கங்கள், செய் முறைகள் அனைத்தையும் இந்த நூல் சுருக்கமாகவும், விளக்கமாகவும் தருகிறது.

இலயோலாக் கல்லூரியில் இளங்கலை பயிலும் தமிழ் மாணவர்களுக்கு கூடவே ஒரு தொழிற்பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப் பெற்ற பல தொழிற் கல்விகளில் அச்சுத் தொழில் கல்வியும் ஒன்று.

அச்சுத் தொழில் கல்வியைப் பயிற்றும் பொறுப்பை தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் க.ப.அறவாணன் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அந்த மாணவர்களுக்காக நான் எடுத்துக் கொண்ட குறிப்புக்களை அடிப்படையாக வைத்து இந்த நூலை எழுதினேன்.

குறிப்பாக இலயோலாக் கல்லூரி தமிழ்த் துறை, அச்சுக்கலை பிரிவு மாணவர்களுக்கு என்று எழுதிய இந்தப் பாடங்கள், தொழில் பயில விரும்பும் பிறருக்கும் பயன்படட்டும் என்ற கருத்தில் இதை ஒரு புத்தகமாக்கி இருக்கிறேன்.

அச்சுத் தொழில் பயில விரும்புவோர்.இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

அன்பன்,
நாரா நாச்சியப்பன்