பக்கம்:மூவரை வென்றான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17


பட்டயம் தன் கைக்கு வந்த உடனேயே தேவதானம், சாப்டுர், ஆகிய இரு ஜமீன்தார்களுக்கும் தன் பக்கம் உதவினால் வீரமல்லனுடைய இனாம் கிராமத்தைக் கைப்பற்றிப் பங்கு தருவதாகச் செய்தி அனுப்பினார் நத்தம்பட்டி ஜமீன் தார் வீரமருதுத்தேவர். ஜமீன்தார்கள் இருவருமே உதவச் சம்மதித்தனர்.

குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரத்தில் தான் வடபுறமிருந்து எல்லைக்குள் நுழைய முயலுவதாகச் சாப்டூர் ஜமீன் தாரும், மேற்குப் புறமிருந்து நுழைவதாக தேவதானம் ஜமீன்தாரும், நத்தம்பட்டி ஜமீன்தாருக்கு உடன்பட்டிருந்தனர்.

‘எப்படியும் வீரமல்லன் இனாம் கிராமத்தைப் பறி கொடுத்துவிட்டுத் தோற்றுச் சந்நியாசியாகப் போவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றெண்ணி இறுமாந்து கிடந்தார் ஜமீன்தார் வீரமருதுத் தேவர். ‘மூன்று பேரில் யாராவது ஒருவர் எல்லைக்குள் நுழைந்தாலும் வெற்றி நமக்குத் தானே? என்பதே அவருடைய இறுமாப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் வீரமல்லன் தம்மைவிடச் சாமர்த்தியமாக நினைத்துச் சாமர்த்தியமாகச் செயலாற்றத் தெரிந்தவன் என்பதை அவர் மறந்துவிட்டார்.

அப்போது மழைக்காலமாகையினால் வீரமல்லனின் கண்மாய் நிறைந்திருந்தது.

முழுமையாக இல்லாவிட்டாலும், மேற்கே அடுக்கடுக்காக இருந்த நத்தம்பட்டி ஜமீன் கண்மாய்களும் முக்கால் பகுதி நிறைந்திருந்தன. கன்னிமாலை ஆற்றிலும் சுமாராகத் தண்ணிர் ஒடிக்கொண்டிருந்தது.

கன்னிமாலையாற்றைக் கடந்து வீரமல்லனின் இனாம். கிராமத்தை அடைய ஒரு பாலம் இருந்தது. ஆற்றில் பிரவாகம் அதிகமாகிவிட்டால் மேற்கேயிருந்தும் தெற்கேயிருந்தும் போக்குவரத்துத் தூண்டிக்கப்பட்டுவிடும். வீர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/19&oldid=505588" இலிருந்து மீள்விக்கப்பட்டது