பக்கம்:மேனகா 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மேனகா

ஏற்றிவிடப்பட்டிருந்த சம்பங்கிக்கொடி உட்புறத்தை நன்றாய் மறைத்துக்கொண்டிருந்தது. அதன் மறைவில் நின்று உட்புறத்தில் துரை என்ன செய்கிறார் என்பதை உணரும் பொருட்டு ஒட்டகத்தைப் போலத் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தவண்ணம் நின்று தத்தளித்தார். பொட்லர் அந்தோனி ஓசை செய்யாமல் பங்களாவிற்குள் நுழைவதும், வெளிப்படுவது மாயிருந்தான். அவனிடம் பரம நண்பரைப் போல அன்பும் புன்னகையும் காட்டி துரை எழுந்துவிட்டாரோ என்று தலையசைப்பாற் கேட்டார். அந்த மாதத்திற்கு தாசில்தார் அவனுக்குப் பணம் கொடா திருந்தமையால் அவன் அவருக்கு முகங் கொடாமற் போய்விட்டான். அடுத்த நிமிஷம் உட்புறம் துரையின் குரல் உண்டாயிற்று. அது கோபக்குரலாய்த் தோன்றியது. துரைமார் படுக்கையை விட்டெழுமுன் தேத்தண்ணீர் குடித்தே எழுதல் வழக்கம். அவ்வாறே, திண்டில் சாய்ந்தவண்ணம் துரை தேத்தண்ணீரைப் பருக முயன்றார். தூக்க மயக்கத்தில் கண்ணிமைகள் இன்னம் மூடிக்கொண்டிருந்தன. அப்படியே தேத்தண்ணீர் பாத்திரத்தை வாயில் வைத்தார். அதில் சருக்கரை அதிகமாய்ப் போடப்பட்டிருந்தது. துரைக்கு பெருத்த கோபம் மூண்டுவிட்டது. உரத்த குரலில் அந்தோனியை அழைத்தார். அது தாசில்தார்காதில் தாந்தோனியென்று தம்மை அழைத்ததாகப் பட்டது. உடனே தாசில்தார் குடுகுடென்று உள்ளே ஒடிக் கட்டிலண்டையில் நின்றார். துரை இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. தாந்தோனிராயர் “காலை வந்தனம்” கூற வாயைத் திறந்தார். அப்போது துரையின் வாயிலிருந்த தேத்தண்ணீர் வெளிப்பட்டு தாசில்தாரின், வாயிலும், மூக்கிலும், முகத்திலும் உடைகளிலும் வருணாஸ்திரம்போல மோதி அபிஷேகம் செய்தது.துரை அதே காலத்தில் “கழுதையின் மகனே! எடுத்துக்கொள் உன் தேத்தண்ணிரை. மூளையில்லா மிருகமே!” என்று தாசில்தாரை அன்போடு உபசரித்தார். எதிர்பாராத அந்த பட்சத்தைக் கண்ட தாசில்தார் சிறிது நேரம் திகைத்துக் கல்லாய் நின்றார். அவருடைய விலையுயர்ந்த ஆடைகள் கெட்டுப் போயின. என்ன செய்வார்; ஒரு வகையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/102&oldid=1249182" இலிருந்து மீள்விக்கப்பட்டது