பக்கம்:மேனகா 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

101

கட்டிலிற்கு அப்பால் திடீரென்று விரைந்து சென்று நின்றாள். பெருங் கூச்சல் புரியலாமோ வென்று நினைத்தாள். அச்சத்தினால் வாயைத் திறக்கக் கூடாமல் போயிற்று. அதற்குள் அந்தச் சிங்காரப் புருஷன் கட்டிலிற்கு எதிர்புறத்திலிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து, “மேனகா! நீ ஏன் மூடப் பெண்களைப்போல இப்படிப் பிணங்குகிறாய்? உன்னுடைய உயர்ந்த புத்தியென்ன! அருமையான குணமென்ன! மேலான படிப்பென்ன! நீ இப்படிச்செய்வது ஆச்சரியமாக இருக்கிறது! நானும் ஒரு மனிதன் தானே! பேயல்ல; பிசாசல்ல; உன்னை விழுங்கிவிட மாட்டேன். அஞ்சாதே! அப்படி அந்தக் கட்டிலின் மேல் உட்கார்ந்துகொள். உன் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து இங்கே நிரம்ப நாழிகையாய் நின்றதனால் களைத்துப் போயிருக்கிறாய்! அதோ மேஜையின் மேல் தின் பண்டங்களும், பழங்களும் ஏராளமாய் நிறைந்திருக்கின்றன. வேண்டியவற்றை எடுத்துச் சாப்பிட்டுக் களைப்பாற்றிக்கொள். சந்தோஷமாக என்னுடன் பேசு. நீ இப்படி வருந்தி நிற்பதைக் காண என் மனம் துடிக்கிறது. கவலைப்படாதே. விரோதியின் கையில் நீ அகப்பட்டுக்கொள்ளவில்லை. உன்னைத் தன் உயிரினும் மேலாக மதித்து, தன் இருதயமாகிய மாளிகையில் வைத்து தினம் தினம் தொழுது ஆண்டவனைப்போல வணங்கும் குணமுடைய மனிதனாகிய என்னிடம் நீ வந்த பிறகு உன்னுடைய கலியே நீங்கிவிட்டது. நீ எங்கு சென்றால் உனக்குப் பொருத்தமான சுகத்தையும் இன்பத்தையும் நீ அடைவாயோ அங்கு உன்னை ஆண்டவன் கொணர்ந்து சேர்த்துவிட்டான். நீ உன் வீட்டில் அடைவதைவிட இங்கு ஆயிரம் பங்கு அதிகரித்த செல்வாக்கை அடையலாம். உனக்கு புலிப்பால் தேவையா? வாய் திறந்து சொல்; உடனே உனக்கெதிரில் வந்து நிற்கும்; ஆகா! உன் முகத்தில் வியர்வை ஒழுகுகிறதே! கைக்குட்டையால் துடைக்கட்டுமா? அல்லது விசிறிகொண்டு வீசட்டுமா?” என்றான். அதைக் கேட்ட மேனகாவின் உயிர் துடித்தது. கோபமும், ஆத்திரமும் காட்டாற்று வெள்ளமென வரம்பின்றிப் பொங்கி யெழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/119&oldid=1249529" இலிருந்து மீள்விக்கப்பட்டது