பக்கம்:மேனகா 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

103

முதலில் உட்கார்ந்துகொள். பிறகு பேசலாம். நிற்பதனால் உன் உடம்பு தள்ளாடுவதைக் காண, என் உயிரே தள்ளாடுகிறது. அந்த மெத்தையின் மீது உட்கார் என் பொருட்டு இது வரையில் நின்று வருந்திய உன் அருமையான கால்களை வருடி இன்பங் கொடுக்கட்டுமா? அதோ மேஜைமீது காப்பி, ஷர்பத், குல்கந்து, மல்கோவா, செவ்வாழை, ஆப்பிள், ஹல்வா, போர்ட்டு ஒயின், குழம்புப்பால் முதலியவை ஏராளமாய் இருக்கின்றன. நான் எடுத்து வாயில் ஊட்டட்டுமா! என் ராஜாத்தி! பிணங்காதே; எங்கே இப்படி வா! உனக்கு வெட்கமாயிருந்தால், நான் என் கண்ணை மூடிக்கொள்கிறேன்; ஓடிவந்து ஒரு முத்தங்கொடு. அல்லது நீ கண்ணை மூடிக்கொள்; நான் வருகிறேன்” என்றான். அவனுடைய மொழிகள், அவள் பொறுக்கக்கூடிய வரம்பைக் கடந்துவிட்டன. ஒவ்வொரு சொல்லும் அவளுடைய செவியையும், மனத்தையும் தீய்த்தது. இரு செவிகளையும் இறுக மூடிக்கொண்டாள்; கோபமும், ஆத்திரமும் அணை பெயர்க்கப்பட்ட ஆற்று வெள்ளமெனப் பொங்கி யெழுந்தன; தேகம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. கோபமூட்டப்பெற்ற சிறு பூனையும் புலியின் மூர்க்கத்தையும் வலுவையும் கொள்ளுமென்பதற்கு இணங்க அவள் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, அவனுடைய தலையை உடலினின்று ஒரே திருகாய்த் திருகி யெறிந்து அவன் அதற்கு மேல் பேசாமல் செய்துவிட நினைத்தாள். அவன் கூறிய சல்லாப மொழிகளைக் கேட்டதனால் அவளுடைய மனதில் உண்டான பெருஞ்சீற்றம் அவளது இருதயத்தையும், தேகத்தையும், அவனையும், அந்த மாளிகையையும் இரண்டாகப் பிளந்தெறிந்து விடக்கூடிய உரத்தோடு பொங்கியெழுந்தது. உருட்டி விழித்து ஒரே பார்வையால் அவனை எரித்துச் சாம்பலாக்கித் தான் சாம்பசிவத்தின் புதல்வி யென்பதைக் காட்ட எண்ணினாள். அவன் உபயோகித்த கன்ன கடூரமான சொற்களைக் காட்டினும், பெருந்தேவியம்மாளும், சாமாவையரும் தன்னை விற்றுவிட்டார்கள் என்னும் சங்கதியே பெருத்த வியப்பையும், திகைப்பையும் உண்டாக்கியது. அவள் பைத்தியங்கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/121&oldid=1249534" இலிருந்து மீள்விக்கப்பட்டது