பக்கம்:மேனகா 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

111

வைக்கப்பட்டிருந்ததைக் கண்டாள். அது ஒன்றரைச் சாணளவு நீண்டு, பளப்பளப்பாய்க் கூர்மையாய்க் காணப்பட்டது; கண்ணிமைப் பொழுதில் அவள் அந்தக் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு சுவரை அடைந்து, முதுகைச் சுவரில் சார்த்தி, அவனிருந்த பக்கம் திரும்பி நின்று தனக்குள், “ஈசுவரனில்லாமலா பொழுது விடிகிறது! நல்ல சமயத்தில் இந்தக் கத்தியைக் கொடுத்தான். அவன் அனாதை ரட்சகனல்லவா. மனிதருக்கு அவனுடைய பாதுகாப்பே காப்பன்றி, அரசனும் சட்டமும் இந்த அக்கிரமத்தைத் தடுத்தல் கூடுமோ? ஒருகாலுமே இல்லை” என்று நினைத்து, “ஐயா! நீர் இனி வரலாம். நல்ல சமயத்தில் இந்தக் கத்தி எனக்கு உதவிசெய்ய வந்தது. நீர் என்னைத் தீண்டுமுன் இந்தக்கத்தியின் முழுப்பாகமும், என் மார்பில் புதைந்துபோம். பிறகு என் பிணத்தை நீர் உமது இச்சைப்படி செய்யும்” என்றாள்; கத்தியின் பிடியை வலதுகையில் இறுகப்பிடித்துத் தனது மார்பிற்கு நேராக விரைந்து உயர்த்திக் கையின் முழு நீளத்தையும் நீட்டினாள். அந்த விபரீதச் சம்பவத்தைக் கண்ட நைனா முகம்மது பேரச்சம் கொண்டவனாய் உடனே நயமான உரத்த குரலில் கூவி, “வேண்டாம், அப்படிச் செய்யாதே, நிறுத்து, நான் வெளியில் போய்விடுகிறேன். இனி உன்னைத் துன்புறுத்துவதில்லை. உன்னை உடனே கொண்டு போய் உன் வீட்டில் விட்டுவிடுகிறேன். கவலைப்படாதே” என்ற வண்ணம் அவளை விடுத்து நெடுந்துரத்திற்கு அப்பாற்போய் நின்று, “பெண்மணி! நான் உன்னை சாதாரணப் பெண்ணாக மதித்து, அறிவில்லாதவனாய் இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துக் கொள். உன்னைப் பதிவிரதைகளுக்கெல்லாம் ரத்தினமாக மதிக்கவேண்டும். இப்படிப்பட்ட மனைவியை அடைந்த வனுடைய பாக்கியமே பாக்கியம்! என் பணம்போனாலும் போகிறது. நீ சுகமாய் உன் கணவரிடம் போய்ச் சேர். இதோ சாமாவையரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி ஒரு கதவைத் திறந்து கொண்டு அப்பாற் போய்க் கதவைத் திரும்பவும் மூடித் தாளிட்டுச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/129&oldid=1249564" இலிருந்து மீள்விக்கப்பட்டது