பக்கம்:மேனகா 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மேனகா

ஏற்றுக்கொள்வாரோ அன்றி தூற்றி விலக்குவாரோ? நான் என் இருதயத்தை அறுத்து உள்ளிருக்கும் உண்மையைக் காட்டினாலும் அது ஜெகஜால வித்தையோ வென்று அவர் சந்தேகிப்பார். நான் ஒரு சிறிதும் மாசற்றவளாய் இருப்பினும், அவர் என் மீது தம் மனதிற்குள்ளாயினும் வெறுப்பையும் ஐயத்தையும் கொள்வார். அந்தரங்கமான அன்பும் மனமார்ந்த தொடர்பும் இல்லாமற்போனபின், வேண்டா வெறுப்பாய் வாழ்க்கை செய்வதைவிட, நான் உயிரை விடுதலே மேலானது. பாவியாகிய என்னால் பெற்றோருக்கும் பழிப்பு. கணவனுக்கும் தலைகுனிவோடு ஒயாச் சந்தேகம்; ஒழியா வேதனை. எனக்கும் மானக்கேடு. மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே என்றனர் நம் மூத்தோர். இத்தனை தீமைக்கும் நான் உயிரை விடுதலே மருந்து. நான் காணாமல் போனதைப்பற்றி அவர்கள் இப்போது துன்புறுதல் நிச்சயம். நான் திரும்பாமல் போய்விட்டால், அவர்களுடைய துன்பம் ஒரே துன்பமாய்ச் சிறிது காலத்தில் ஒழிந்துபோம்; என்னுடைய களங்கத்தோடு நான் திரும்பிச்சென்றால், அவர்கள் யாவருக்கும் அது மீளா வேதனையாய் முடியும்” என்று பலவாறு யோசனை செய்தாள். தான் மகம்மதியன் வீட்டை விட்டு வெளியிற் போனாலும் இறக்க வேண்டியதே முடிவு. வெளியிற் செல்ல வழியில்லாதலின் அந்தக் காமதுர மகம்மதியன் முகத்தில் இன்னொரு தரம் விழிப்பதிலும் பெரிதும் துணிவைக் கொண்டு அந்தக் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் விடுதலே தீர்மானமாய்க் கொண்டாள். நிர்ம்பவும் ஆண்மை வாய்ந்த மகா வீரனைப்போல மனோ உறுதியும் அஞ்சா நெஞ்சமும் விரக்தியும் கொண்டாள். பளபளப்பாய் மின்னிய வாளைக் கையிலெடுத்தாள். போரில் தோற்ற சுத்த வீரன் தனது பகைவன் கையில் அகப்பட்டு மானம் இழக்காமை கருதி இறக்க நினைத்துப் பகைவரின் குண்டு வரும்போது அதற்கெதிரில் தனது மார்பை விரித்து நின்று அதை ஏற்பவன் எத்தகைய மனோதிடத்தைக் கொள்வானோ அத்தகைய துணிவைக் கொண்டாள். இது விந்தையான செயலோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/132&oldid=1249599" இலிருந்து மீள்விக்கப்பட்டது